நடந்தவை நடப்பவை-4

மீண்டும் ஒரு பனிக்கால தொடக்க கர்நாடக கச்சேரி இந்த மாதம் 16 தேதி விக்டோரியா அடெம்ஸ் ஹாலில் நடந்தது. பாம்பே ஜெயஸ்ரீ மறுபடி தன் மாய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார். எளிமை என்பதற்கு ஒரு இலக்கணம் போல் இருந்தது அன்று. என்னடா வென்று பார்த்தால், மெல்போர்ன்லிருந்த வந்த விமானத்தில் அவரது பெட்டி வரவில்லை. நல்லவேளை தம்பூரா கையோடு கொண்டுவந்ததால் கச்சேரி நடந்தது. அதனாலென்ன அணிந்து வந்த ஜீன்ஸ் டாப்ஸ்சிலேயே பாடுகிறேன் என்று தயாராகிவிட்டார். (எவ்வளவு வித்யாசமாக இருந்திருக்கும். மேடைக் கச்சேரிக்கு ஒரு புது திருப்பமாக இருந்திருக்கும். இருந்தாலும் அவர் ஜீன்ஸ் போட்டிருந்தால் "வசீகராவோ" இல்லை, "ஒன்றா ரெண்டாவோ" கேட்கத்தோன்றியிருக்கும்). பின்பு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புடவை இத்யாதிகளை இங்கிருப்பவர்களிடமிருந்து இரவல் வாங்கி கொடுத்து, அதை அணிந்து வந்து, அந்த பாதிப்பு எதுவும் தன்னுடைய பாடும் திறனில் குறுக்கிடாமல் பாட்டியது மிக பாராட்டவேண்டியது. இதுவே ஒரு பாப், ராக் இசை பாடகருக்கு ஆகியிருந்தால் அதை ஒரு பெரிய நியுஸாக்கி அந்த ஏர்லைன்ஸை ஒரு வழி பண்ணியிருப்பார்கள். நிகழ்ச்சியும் நடந்திருக்காது. இந்த களேபரத்தில் நிகழ்ச்சி அரை மணி தாமதமாக ஆரம்பித்து, அதனால் ராகம் தாளம் பல்லவி இல்லாமலே கச்சேரி முடிந்தது காசு கொடுத்து கேட்க்க வந்த ரசிகர்களுக்கு இது சற்றே குறை. இது நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சொதப்பலே. சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி நடந்த அரங்கத்தின் அனுமதியை விமான தாமதமான போதே சிந்தித்து நீட்டியிருக்க வேண்டும். எனினும் ஒரு பாடமே. வெளிநாட்டில் கச்சேரி அமைப்பாளர்கள் கவனிக்கவேண்டியது.
வழக்கமாக ஆரம்பிக்கும் ஹம்சத்வனியில் வாரணா முகவா என்ற கோடீச்வர ஐயர் பாடலில் தொடங்கி, பிறகு அகிலாண்டேஸ்வரி (த்விஜயந்தி), பஜ ரே(பூர்ணசந்திகா), பார்வதி நயகனே(ஷண்முகப்ரியா,பா.சிவன்), புவனேஸ்வரியா(மோகனகல்யாணி, மு.பாகவதர்), சபாபதிக்கு(ஆபோகி, கோ.பா), கிருஷ்ணா நீ(யமுனாகல்யாணி, விசராயர்?), கண்டேன் கண்டேன் சீதையை(வசந்தா?, அ.கவி) கோபால கோகுல (மால்கவுன்ஸ், துளசி தாஸ்), ராகி தந்திரா(மதுவந்தி, பு.தா), சந்திரசேகரா ஈஷா (சிந்துபைரவி, செ.வை.பா), கோபால கோவிந்த ராதா(பஜன்??), குரை ஒன்றும்(சிவரஞ்சனி/காபி/சி.பை, ராஜாஜி) பாடி கடைசியில் ஒரு தில்லானா பாடி நிறைவு செய்தார். மிருதங்கத்தில் வைத்தியநாதனும் (டி.கே.ஜெயராமன் மகன்), வயலினில் H.N.பாஸ்கரும் மிக அருமையான பக்கவாத்யமாக அமைந்தது சிறப்பு.

அன்று ஜெயஸ்ரீ கொண்டுவந்த அனைத்து சிடிக்களும் விற்று தீர்த்தது ஒரு பெரிய மைல்கல். (நன்றி ஹாரிஸ்ஜெயராஜ்).

நேற்று வெ.த.ச ஜூன் மாத கலைநிகழ்ச்சி நடந்தது. அதில் ஆசிரியர் தா.ஆறுமுகத்தின் ஆரய்ச்சித் தொகுப்பான "நிஸிலாந்தில் தமிழன் பதித்த கால்சுவடு" என்ற நூல் வெளியீடு ஒரு சிறப்பம்சம். இந்நூலைப் பற்றி தனிப்பதிவு போடவேண்டும். இதில் தமிழ்மணி மற்றும் இன்னபிற சரித்திர தடயங்களை தேடிப்பிடித்து பதிவு செய்திருக்கிறார். அவர் வயதுக்கு (82) மிகபாரட்டத்தக்க ஒரு சாதனை. பின்பு எங்களது வெலிங்டன் தமிழ் டாக்கீஸின் பல்சுவை நிகழ்ச்சி ஒரு வழியாக நடந்தேறியது. மக்களை சிரிக்க வைப்பது மிகக்கடினம். எதுக்கு சிரிப்பாய்ங்கன்னே புரியமாட்டேங்குது. இங்குள்ள தமிழ் சங்கம் தாமரை இலை தண்ணீர் போல நடப்பது ஒரு வேதனை. ஏதோ இவர்களிடமிருந்து வசூலித்து, அவர்கள் நேரடியாக தோட்டாக்களும், ஏவுகணைகளும் வாங்க அனுப்பிவிடுகிறார்களோ என்ற மாயையினால், அடுத்த தலைமுறையின் ஆட்டத்தையும் பாட்டத்தையும் பார்த்து, அவர்களை கைதட்டி ஊக்கமளிக்க வரமறுக்கிறார்கள். ஒரு ஜனதா ஹோட்டல் போல் முதலுக்கும் வரவுக்கும் சரியாகிப்போகுமளவுக்கு பலஹீனமான சங்கம் என்பதை யாராவது ஆதாரபுர்வமாக, தெளிவாக விளக்கினால் ஒருவேளை அங்கத்தினர் அளவு கூட வாய்ப்பிருக்கிறது. சொ.செ.சூ போல இங்கு ஒன்றை சொல்லிவிடுவது உத்தமம். நானே இன்னும் தமிழ் சங்கத்தில் மெம்பராகவில்லை!!.

1 comments:

Tulsi said...

அடக்கடவுளே.......... என்ன அருமையான பதிவு. இப்போத்தான் பார்த்தேன்.

சீக்கிரம் தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினரா ஆயிருங்க.

அது இருக்கட்டும், இத்தனை சங்கீத ஞானமா? அடேயப்பா!!!!!!!