முதுமை

இரு நிகழ்வுகள், வேறு வேறாக இருந்தாலும் மிகவும் தொடர்புடையதாக எனக்கு தோன்றியது.

என் அப்பாவின் மிக நெருங்கிய நீண்ட கால நண்பர் சமீபத்தில் இறந்து போனது பற்றி கேள்விப்பட்டேன். நல்ல வசதிகளுடன் சம்பாதிக்கும் மூன்று மகன்கள் அதுவும் எங்கோ கண்கானத தேசத்தில் என்றில்லை, தமிழ்நாட்டுக்குள்ளேயேதான். திடீரென்று மயங்கி விழுந்தவரை, ஏனோ தொலைபேசியை உபயோகிக்க பழகாத அவர் மனைவி பக்கது வீட்டிலிருந்தவர் உதவியுடன் எப்படியோ அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்தாயிற்று. விஷயமறிந்து உடனே வந்த மச்சான் இந்த அந்த மருத்துவமனை சரியில்லை என வேறு ஒன்றுக்கு கூட்டிச்சென்றார். விஷயம் கேளிவிப்பட்டு வந்து சேர்ந்த மகன்கள், அந்த மருத்துவமனையும் போய் வருவதற்கு வசதிப்படவில்லை என்று அபிப்ராயப்பட மீண்டும் இன்னுமொரு மருத்துவமனை மாற்றம்.

மேலோட்டமாக மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக படும். ஆனால் அப்படி இல்லை. உதாரணத்துக்கு, மருத்துவமனையில் அப்பாவை பார்க்க வந்த மகன் அப்பா துண்டு கட்டி இருப்பதை பார்த்து ஏன் என்று கேட்க்க, முடியாமையினால் சிறுநீர் கழித்துவிட்டதால் என கூற, ஓஹோ என கேட்டுவிட்டு, சென்றதோடு சரி. உடனே சென்று ஒரு மாற்று வேட்டி வீட்டிலிருந்து கொண்டுவரவோ இல்லை பக்கத்து கடையில் வாங்கியோ கொடுக்க யாருக்குமே தோன்றாமல் போய்விட்டது. இப்படி பல்வேறு கசந்த அனுபவங்கள் அந்த மனிதரை மிகவும் பாதித்திருக்கவேண்டும். இரண்டு நாள் கழித்து மனச்சுமையுடனே இறந்துவிட்டிருக்கிறார்.
--
நானும் என் மகனும் நடந்து செல்லும் போது எங்களுக்கு முன்பாக ஒரு வயதானவர் கையில் வாக்கர் வைத்துக்கொண்டு மிக மெதுவாக சென்று கொண்டிருந்தார். மிக குறுகிய நடைபாதையாதலால் அவரை முந்தி செல்ல வேண்டுமானால் அருகருகே நடந்து கொண்டிருந்த நாஙகள் ஒருவர் பின் ஒருவராக அவரை இடித்துவிடாமல் நான் ஒதுங்கி என் மகனை அவரை முந்தி செல்ல விட்டிருக்கவேண்டும். ஆனால் அவரை விட மிக வேகமாக நடந்து கொண்டிருந்ததால் நிதானிப்பதற்குள் அவர் அருகே சென்று விட்டோம், நான் ஒதுங்கவில்லையாதலால் மிக லேசாக அவரை என் மகன் இடிக்க நேர்ந்தது. உடனே புன்னகையுடன் திரும்பியவர் “ I am sorry I am blocking your way" என்றார். பதிலுக்கு என் மகனும் "Not at all, sorry I bumped on you" என்று கூறி அவரை கடந்து வந்து விட்டோம். சற்று தள்ளி வந்த பின் என் மகன் என்னிடம்,

“ நீ ஏன் ஒதுங்கி வழி விடல்ல?” என்று கேட்டான்.

“அட தெரியாம ஒரு வேகத்துல வந்துட்டேன் அதான்” என்றேன்

" இருந்தாலும் your are wrong, you just reminded him of his old age, he will feel I am old, பாவம்” என்றான்.

எனக்கே என் மீது கோபமாக வந்தது, சற்று கவனமாக இருந்திருக்கலாம்.

--
முதுமை கண்ணாடி போல
எந்த சமயமும்
எதன் மூலமாகவும்
நொருங்கி விழுந்துவிட
காலத்தை பிரதிபலித்து
காத்து நிற்கிறது.

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

ஜெயந்தி நாராயணன் said...

முதுமை….. பல நாட்களாக நான் யோசித்துக் கொண்டிருக்கும் விஷயம்.
இந்த டாபிக் ஆரம்பிச்சா பேசிண்டே போவேன். ஏன்ன ஒன்றல்ல, பல சம்பவங்கள் பார்த்திருக்கேன். மனதிற்கு மிகவும் பாரமாக இருக்கும்.
எனக்கு தெரிந்த ஒரு முதியவர் எண்பது வயது தாண்டிய பிறகு நினைவு கொஞ்சம் தப்பி விட்டது. வீட்டை விட்டு அடிக்கடி எங்காவது சென்று விடுவார். யாராவது கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் அவர் அட்ரஸை சரியாக ஒவ்வொரு முறையும் சொல்லி இருப்பது ஆச்சரியம். அவருடைய மனைவி மற்றும் மகன்கள் சொல்வது, “ கிழடு வேணும்னே நடிக்கறது. சோத்த தின்னுட்டு வீட்ல கிடக்க முடியாதா”. அதற்கு பிறகு சில நாட்கள் வீட்டிலேயே கதவையெல்லாம் நன்றாக பூட்டி வைத்திருந்தார்கள். யாராவது போனால் “பசிக்கிறது எதாவது கொண்டு வந்தியா?” என்பார். அதற்குள் அவர் மனைவி, “இப்பதானே கொட்டிண்ட அதுக்குள்ள வந்தவங்க கிட்ட என்ன கேக்கரது”.
அவர் இறந்த போது போயிருந்தேன். அவர் மனைவி கண்ணில் நீருடன் (வரவழைக்கப் பட்ட கண்ணீர்) எத்தன வயசான என்ன, இன்னும் கொஞ்ச நாள் இருக்க மாட்டரான்னுதான் இருக்கு.”
இது போல் இன்னும் எத்தனை முதியவர்களோ என்று எண்ணிய போது கண்கள் பனித்தன.
இப்ப இருக்க்ற tight schedule ல அப்பா அம்மாவோட டைம்
ஸ்பெண்ட் பண்ண முடியாதுன்னு சொல்றவங்க, தன் மனைவி (கணவன்) மக்களுடன் சினிமா செல்வதையோ மற்றபடி வெளியில் செல்வதையோ நிறுத்துவதில்லை.
வயதான பிறகு அவர்களுக்கு வரும் insecured feeling ஐ நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். தான் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கிறோமோ என்ற உணர்வு அவ்ர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

துளசி கோபால் said...

கொடிது கொடிது முதுமை கொடிதுன்னு 'பாட்டி' சொல்லிட்டுப் போயிட்டாங்களே.

எனக்கும் இப்ப முதுமைக்காலத்தை நினைச்சு மன உளைச்சலாத்தான் இருக்கு.

நல்லபடியா யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போகணும் என்பதே பிரார்த்தனை.

நீண்ட ஆயுள் வேணாம். தேவையும் இல்லைன்னு நினைக்கிறேன்.

Riyas said...

good post..

கிவியன் said...

வருக ஜெயந்தி, துளசி, ரியாஸ்,

துளசி: முதுமை, மனதால் உடலுக்கா இல்லை உடலால் மனதுக்கா?

நம் நாட்டில் வயதானவர்கள் அநேகமாக தங்கள் குழந்தைகளை சார்ந்து வாழ வேண்டியுள்ளது. பிடிக்கிறதோ இல்லயோ கட்டாயம் பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரு காலம் வரை தன் விருப்பம் போல இருந்துவிட்டு, பின்பு வயதானதால் பலவற்றுக்கும் தன்னை சமரசம் (compromise) செய்துகொண்டாக வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டி வரும்.

அங்கு அப்படி என்றால் இங்கு நிலைமை இன்னும் மோசம். 17 வயதில் குழந்தைகளை nest-ஐ விட்டு துரத்தி விடுவதால், இல்லை அவர்களாகவே பறந்து விடுவதால், அநேகமாக தனியே தான் பல தாத்தா பாட்டிகள் வாழ்கிறார்கள். கிட்ட தட்ட கேள்விக்குறி மாதிரி வளைந்து போனவர்கள் கையில் குச்சியை வைத்துக்கொண்டு தட்டு தடுமாறி காடைகளுக்கு வருவதை பார்க்கும் போதும், இறந்து போய் 5 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்க பட்ட ஒரு வயதான மூதாட்டி பற்றிய செய்தியை (http://www.dailymail.co.uk/news/article-1197314/Woman-85-lay-dead-flat-years-noticed-missing.html) கேள்விப்பட்ட போதும் நம் நாட்டில் உள்ளதுபோல் சமரசம் செய்து கொண்டாவது வாழ்வது நல்லதோ என தோன்றுகிறது.

வரமிருந்து வேண்டி பெற்ற முதுமை கோலத்தை பாட்டி ஏன் கொடிது கொடிது என பாடிவைத்தாள்??

ஜெயந்தி நாராயணன் said...

”கொடிது கொடிது முதுமையில் தனிமை”
என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு வயதான க்றிஸ்டியன் தம்பதிகள். மகனும் மகளும் உள்ளூரில் இருந்தாலும் அவர்கள் தனியாகத்தான் இருந்தார்கள். தாத்தா, வீட்டுக்குள்தான் நடமாட்டம். ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஆட்டோ வைத்து அருகில் உள்ள சர்ச்சுக்கு பாட்டி கூட்டிக் கொண்டு செல்வார். ஆனால் பாட்டி பயங்கர ஆக்டிவ். தினமும் தாத்தாவுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விட்டு ஒரு பேகை மாட்டிக் கொண்டு கடைக்கு செல்வது மற்றும் பிற வேலைகளை கவனிக்க சென்று விட்டுவார். எப்பவும் நடந்து, பஸ் பிடித்துத்தான் செல்வார். ஆட்டோலாம் கிடையாது. எனக்கு அவருடைய சுறுசுறுப்பை பார்த்து ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில் அந்த தாத்தா 86 வயதில் இறந்து போனார். அன்று அங்கு சென்ற போது, “நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு போய்ட்டார்மா, ஒரு குறையும் இல்லை” என்று தைரியமாக சொன்ன பாட்டியை ஒரு மாதம் கழித்துதான் வெளியில் பார்த்தேன். “எப்படி இருக்கிங்க” என்று கேட்டதுதான் தாமதம், கைகள் நடுங்கியபடி என் கையை பிடித்துக் கொண்டு, ”முடியலம்மா. எதுவுமே முடியல. இப்படி திடீர்னு விட்டுட்டு போயிட்டார். நான் இதுக்கு என்னை தயார் படுத்திக்கல. அம்பது வருஷத்துக்கு மேல சேர்ந்து இருந்துட்டமே. இனி தனியா எப்படி என்னால எல்லாம் செய்ய முடியும்.”
இவ்வளவு நாட்களாகவும் பாட்டிதான் எல்லாம் செய்து கொண்டிருந்தாள் தாத்தா வீட்டில் இருந்த தெம்பில். அந்த துணை போனவுடன் அவ்வளவு பலகீனமாகி விட்டாள்.
“பேசாம பையன் வீட்ல போய் இருங்க, பேரப் பசங்களப் பாத்தா மனசுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும், கவலைய மறந்த மாதிரியும் இருக்கும்.”.
“போய் வந்துட்டு இருக்கேன். இங்க வீட்ட போட்டுட்டு போக முடியாதுல்ல. சரிம்மா வரேன்” என்று என்னுடன் பேசி விட்டு சென்ற பாட்டியின் நடையில் இருந்த தள்ளாமை நான் இது வரை பார்க்காதது.