மாறுதல்
ஊரிலிருந்த எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தோம். குடியிருந்தவர்கள் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பின்பு காலி செய்ததால் அப்பா என்னை விஸ்வநாதன் வீட்டிலிருந்து சாவியை வாங்கிக்கொண்டு வீடிருக்கும் நிலையை பார்த்து மேற்க்கொண்டு மராமத்து வேலைகள் என்ன தேவை படும் என பார்த்து வரச்சொல்லியிருந்தார். சிறு வயதில் நான் சுற்றி வந்த வீதிதான். தெருவில் ஒன்றிரண்டு வீட்டிலிருந்து "அடே அடே, எப்போ வந்தாய்? எப்படியிருக்காங்க எல்லோரும்?" என வந்து கேட்பார்கள் என்று ஒரு குறு குறுப்பு மனதுக்குள் ஓடினாலும், வெய்யில் மண்டையை பிளக்க ஆயிரம் முறை நடந்திருந்த நிசப்தமான தெருவில் ஆயிரத்து ஒண்ணாம் முறை இப்போது நடக்கையில் ஏதோ யாருமற்ற பாலைவனத்தில் நடந்து போவது போன்று தோன்றியது. இந்த விஐபியை தெருவில் ஒரு பய கண்டுக்க மாட்டேங்கறானேன்னு ஒரு சிந்தனை ஓட்டத்தோட விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் வசித்த போது இருந்த பலரும் வெவ்வேறிடங்களுக்கு எங்களைப் போன்றே மாறி சென்றதையும், இரண்டு தெருவுக்கு பின்னால் தண்ணீர் தொட்டியும் புதிதாக ஒரு சினிமா தியேட்டரும்தான் இந்த ஆறு வருடங்களில் நடந்த மிக முக்கியமான மாறுதல்கள் என்பதை சாப்பிடும் போது விஸ்வநாதன் மூலம் அறிந்தேன்.
சாவியை வாங்கிக்கொண்டு தெருவின் கோடியிலிருந்த எங்கள் வீட்டை திறந்தேன். நுழைந்ததும் கண்ணில் பட்டது சைக்கிள் நிறுத்தியதற்கான டயரின் அடையாளம். மேலும் உள்ளே, கழற்றிக் கொண்டு போன சுவர் கடிகாரமும் குழல் விளக்குப் பட்டிகளும் விட்டுப் போன தடையங்கள். மேனியெங்கும் ஆணியாக பழுவேட்டரையர் போல சுவர்களும், மூலையில் கிடந்த பழைய காலண்டர்களும், புகையேறிய சமையலறையும், காலியான் சில ரீஃபிலும் சில பல்லி முட்டைகளும், இறந்து கிடந்த கரப்பான்களும், ஜன்னலில் ஸ்டிக்கர் பொட்டும், ஹேர் பின்னும் ஏதோ சரித்திர கால கோட்டை போல் அங்கு கடந்து போனவற்றை எனக்கு மெளனமாக கூறிக்கொண்டிருந்தது.
வாசலில் "ஸார்" என்ற ராக்கப்பனின் குரல் கேட்டு மீண்டு "உள்ள வாப்பா" என்றேன்.
காவி ஓடும் பல்லெல்லாம் தெரிய சிரித்துக்கொண்டே வந்தான். இந்த தெருவில் மாறாமல் இருப்பது இந்த ஆல்-இன்-ஆல் ராக்கப்பனும் தானோ என தோன்றியது. கக்கூஸ் கழுவுவது, அடைத்த சாக்கடையை சரி செய்வது, கழிவுத் தொட்டியை காலி செய்வது என இந்த ஏரியாவையே சுகாதாரமாக வைக்க உதவும் மிகப்பெரிய வேலை அவனுடையது. இது தவிர அவப்போது யார் சொல்லும் உதிரி வேலைகளுக்கும் ராக்கப்பன்தான்.
"இங்க பாரு வீட்ட சுத்தமா க்ளின் பண்ணி, முக்கியமா செப்டிக் டாங்க்க க்ளீன் பண்ணனும், எல்லாத்துக்கும் சேத்து எவ்வளவு வேணும்னு சொல்லு".
"உங்குளுக்கு தெரியாதா ஸார், பாத்து குடு".
"எனக்கு தெரியாது. நீ சொல்லு எவ்வளவுன்னு"
வெத்தைலையை மடித்து போட்டுக்கொண்டே "ஒரு நூத்தம்பது ரூவா குடு போதும்"
ஹூம், போதுமாம். இதுக்குதான் இந்த வேலைக்கே நான் போகலைன்னாலும் "எருமை மாடாட்டம் வளந்திருக்கே இந்த வேலையாவது பண்ணீட்டு வா" ன்னு அப்பா அனுப்பிச்சுட்டார். இப்போ இவன் கேக்கறத குடுத்தா "உனக்கு சமத்து போதாதுன்னு சொல்லுவாரு. குறைச்சு குடுத்தா "பாதி வேலைய பண்ணாமலே போயிருப்பானே உன்ன ஏமாத்திட்டுன்னு"வாருன்னு மனதில் ஏகப்பட்ட குடைச்சல். இப்போ பார்த்து இந்த விஸ்வநாதன் வேற இல்ல. வந்த வேலையாகனுமேன்னு
"சரி சரி நூறு ரூவா தர்றேன் வேலைய சீக்கிரம் முடி, நான் நாளைக்கு காலேல போகனும்"
"இன்னா ஸார் ஏதாவது பாத்து மேல குடு"
"திரும்ப ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வெள்ளையடிச்சு நிறைய வேலையெல்லாமிருக்கு அப்போ மேல தரேன்னு" சாமர்த்தியம் பேசினேன்.
"இப்போ வீட்டு உள்ளாற க்ளீன் பண்ணிடறேன், ராத்திரி செப்டிக் டாங்கை பாத்துக்கலாம்" என்று வேலையில் மும்முரமானான்.
அவன் குடிசையிருந்த இடம் விற்கப்பட்டு நகரின் கடைசியில் பால்காரர் தனது மாட்டுக் கொட்டகையின் அருகில் இடம் கொடுத்ததால் அங்கு குடிசையை மாற்றிவிட்டதாக கூறினான். நாமெல்லாம் நம்முடைய இஷ்டத்தினால் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாறுவோம். இந்த மாதிரி நம்மளயும் யாராவது மூட்டை கட்டிட்டு வேற இடம் பாருன்னு சொன்னா எப்படியிருக்கும்னு யோசித்துக்கொண்டிருந்தேன். பின்பு அவனது குடும்பத்தைப் பற்றிபேச்சு திரும்பியது. ஒரு பெண்ணும் இரண்டு மகனும், யாருக்கும் படிப்பு வரவில்லை என கூறினான். மகள் தாயுடன் வீட்டு வேலைக்கு செல்வதாகவும் இரண்டு பசங்களும், சும்மா சுற்றி வருவதாகவும், ஒரு பிள்ளையும் படிக்கவில்லை என்பது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் கூறினான். வீட்டை துப்புரவு செய்துவிட்டு மாலை ஆறு மணிக்கு போனவன் இரவு ஒன்பது மணிக்கு வந்துசேர்ந்தான்.
"என்னா சார் ஆரம்பிச்சுருவோமா?"
"ஏன்பா ஊம்பிள்ளை யாரையும் கூட்டிட்டு வரலியா தனியா ஏன் கஷ்டப்படரே
"வரலாந்தா, வேற வேலையா இருந்தா பரவாயில்ல. இந்த பீ அள்ளிகொட்டறதுக்கு வேணாம்னு எம் பொன்டாட்டி விட மாட்டா
பிறகு தொட்டி மேலிருந்த ஸ்லாப் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான். நாற்றம் எங்கும் பரவியது. நான் துண்டால் மூக்கை மூடிக்கொண்டேன்.
"நீ உள்ளார போயிரு ஸாரு வாடையடிக்கும்" என்ற படியே ஒரு பாட்டிலில் கொண்டுவந்திருந்த மண்ணென்னெயை சுற்றி ஊற்றினான். ஓரளவு இரண்டு வாடையும் கலந்து கொஞ்சம் சகிக்கும்படியாகியது. தோளில் இருந்த சிகப்பு குற்றாலத் துண்டை தலையில் கட்டிக்கொண்டான். குளிர் பிரதேசத்தில் தீ மூட்டி கத கதப்புக்கு அருகே அமர்வது போல ஒரு பீடியை உருவி பற்ற வைத்துக்கொண்டு டாங்க் விளிம்பில் அமர்ந்தான். "நான் ஆனையிட்டால் அது நடந்துவிட்டால் ..." என்று பாட்டு பாட ஆரம்பித்தான். பிறகு மறைவாக வைத்திருந்த இன்னொரு பாட்டிலை எடுத்தான்.
"இதப் போட்டா தா வேல சுளுவு ஸாரு" என்றான்.
அனேகமாக இந்த கொடுமையான வேலைக்கு தன் உடல் உருப்பு எல்லாம் மரத்துபோக வேண்டும் என்று ஸ்ருதி சேர்ப்பதுபோலிருந்தது. கட்டியிருந்த வேட்டியை உருவி ஒரு பக்கமாக வைத்துவிட்டு அரை ட்ரவுசருடன் தொட்டியின்னுள்ளே இருந்து கயிரு கட்டிய வாளியில் எடுத்து அருகே இருந்த சாக்கடையில் கொட்டினான். நான் பார்த்துக்கொண்டேயிருந்தேன். என்ன ஒரு கடினமான் வேலையிது. அடுத்தவன் கழிவை இன்னொருவன் சுத்தம் செய்வதா? மனிதன் நாகரீகமடைந்து என்ன பயன். காட்டுவாசியாக இருந்த காலத்தில் கூட இந்த மனிதன் இந்த மாதிரி இருந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்த முறை அப்பாவிடம் சொல்லி லாரியை வரவழைத்து மோட்டார் வைத்து எடுக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டே
"லாரில இந்த ஏரியால எடுக்கரதில்லையா" என்று அவனிடம் கேட்டேன்.
"எடுப்பாய்ங்களே, ஆனா பைஸா சாஸ்த்தி ஸார். எம்பொழப்ல மண்ணப்போடரத்துக்குன்னே வந்துர்றாய்ங்க."
ஆக இவனுடைய வருமானம் பாதிக்கும் ஆபத்துமிருக்கிரது. நள்ளிரவாகிப்போனது முடிவதற்கு. இரவு படுத்த பின் நீண்ட நேரத்திற்கு தொட்டியினடியில் சகதி போல் தேங்கிக் கிடந்ததை உள்ளே இரங்கி வெரும் கைகளால் வாளியில் நிரப்பி அவன் கொட்டிய காட்சி ஓடிக்கொண்டிருந்தது. நாமெல்லாம் இப்படி சில மனிதர்களை வேலை வாங்குவது ஒருவகையில் அவர்களை அடிமைகளாகவே வைத்திருக்கத்தானோ? பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டுமென்று ஆசை படுகிறான். ஆனால் தகுந்த அறிவுரை சொல்லவோ வாய்ப்புகளை ஏற்படுத்தவோ யாருக்கும் தோன்றவில்லை. இப்போது இவன். இவனுக்கு பின் இவனது பிள்ளைகளும் வேறு வழியின்றி இந்த மாதிரியே வேலை செய்யக்கூடும். எந்த தலைமுறையில் இது மாறும்? எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. விஸ்வநாதனின் மனைவி வந்து எழுப்பிவிட்டு போனார்கள். பின்பு காலை எல்லாம் முடித்து அவர்களிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்பினேன். பஸ் ஸ்டாப் நோக்கி நடக்கையில்
"என்னா ஸார் கிளம்பிட்டியா?" என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால் ராக்கப்பன். அதே குற்றாலத்துண்டை தலையில் கட்டிக்கொண்டு செங்கல்லை அடுக்கி சிமெண்ட் வைத்து பூசிக்கொண்டிருந்தான். பின்பு தான் கவனித்தேன். தெருவின் இரு புரமும் தாருமாராக ஓடிகொண்டிருந்த சாக்கடையை சரி செய்து சிமெண்ட் வாய்கால் அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. விஸ்வநாதன் இந்த ஊரில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மாநாடு பற்றி கூறியது நினைவுக்கு வந்தது.அதற்காக ஊரையே ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தார்கள். இந்த களேபரத்தில் ஒவர் நைட்டில் ஆல்-இன்-ஆல் ராக்கப்பன் புரொமோஷன் கிடைத்து கொத்தனாரகிவிட்டான். அவனுக்கு கீழ் மண், சிமெண்ட், செங்கல், கலவை எடுத்து குடுக்கமேலும் நாலு பேர் இருப்பதையும் பார்த்தேன்.
"ம் நிக்கிரயே, சீக்கிரம் கொண்டா மதியதுக்குள்ள அந்த் முக்கு வர முடிச்சுரனும்" என்று ராக்கப்பனின் கட்டளைகள் பறந்து கொண்டிருந்தது.
"என்னப்பா ராக்கப்பா உனக்கு இந்த வேலையும் தெரியுமா?"
"என்னா பெரிய வேலை சார், நம்ம தலைவரு மாதிரி எல்லாத்தையும் கத்துக்கனும் சார்" என்று சொன்னவனின் கண்களில் ஒரு புது ஒளியையும், வாழ்கையில் தானும் முன்னேறி விட்டது போல் முகத்தில் தெரிந்த தன்நம்பிக்கையும், யார் எப்படி சொன்னாலென்ன, எங்கோ இருக்கும் இவன் போற்றும் தலைவன் ஒரு நளைக்காகவாவது இவனை ராஜாவாக்கிவிட்டது போல்தான் தோன்றியது.
2 comments:
அன்புள்ள சுரேஷ்,
இந்த மாதிரி வேலைக்கெல்லாம் பேரமே பேசாமக் கூலியைக் கொடுத்துரணும்.
தெரிந்தே நாமும் வேறு வழியும் தெரியாது தொடர்ந்து 'அவர்களை' அப்படியே, அங்கேயே வைத்திருக்கும் தவறைச்செய்கிறோமோ?
Post a Comment