தமிழ் சினிமா பற்றி பாரதிதாசன்

சமீபத்தில் ஒரு பாடலுக்காக பாரதிதாசன் படைப்புகளை புரட்டிக்கொண்டிருந்த போது புதிய உலகம் தொகுதியில் "தமிழ்நாட்டிற் சினிமா" என்னும் தலைப்பில் இந்த கவிதையை எழுதியுள்ளார்.

சினிமா எப்படிஇருக்கும் என்று, ஒரு சினிமாவை பார்த்துவிட வேண்டும் என்று மிக ஆவலாக இருந்திருக்கிறார் பாவேந்தர். அதனை இப்படி வெளிப்படுத்துகிறார்:

திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்,
"இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்" என்றுபல நினைத்தேன்.
ஒலியுருவப் படம்ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்.

பின்பு பேச்சில்லா ஆங்கிலப்படத்தை கண்டு மெய்மறந்ததை இப்படி
வெளிப்படுத்துகிறார்:

புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்.
உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி,அதில் இயற்கையெழில் கண்டேன்!
கதைமுடிவில் யுபடம்ருஎன்ற நினைவுவந்த தன்றே!


அதன் பின் இந்தியாவிலும் சினிமா தொழில் நுட்பம் பெருகி பல பேசும் படங்கள்

வெளியாக தொடங்கி அது தமழிலும் வந்தபோது,
"இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்

எதிர்வைக்கும் நாள்எந்நாள்"
என்ற கனவுக்கு நேரெதிராக வந்த படங்களை கண்டு இப்படி எழுதுகிறார்:

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!
மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!


இன்று தமிழ் படங்கள் சில மாறுதல்கள் அடைந்தாலும், அத்திம்பேர் தமிழ் இல்லை, இந்துஸ்தான், தெலுங்கு பாடல் இல்லை, பரமசிவன் இல்லை, ஆனால் பாவேந்தர் கூறியதுபோல்
மற்றவைவெல்லாம் அப்படியே உள்ளன. மேலும்,

படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!



என்று மிக நொந்து போய் இருப்பது இன்றளவும் நிறைவேரவில்லை.



2 comments:

துளசி கோபால் said...

யப்பா...சுரேஷு
இது என்ன பாரதிதாசனைக் கரைச்சுக் குடிச்சாச்சா?

கிவியன் said...

கடலை எப்படி குடிக்கமுடியும். ஒரு எள் அளவு படித்ததுதான். ஆனா எவ்வளவு ஃபீலிங்கா எழுதிவெச்சுட்டு போயிருக்காரு?