மனித மிருகம் மட்டுமே நகம் கடிக்கும்



காலையில் பஸ் பிடிப்பதற்காக பஸ் ஸ்டாப்பில் நிற்கிறேன். மழை தூறிக்கொண்டிருந்தது. மிதமான குளிர். 9.12க்கு வரவேண்டிய பஸ் 9.35 ஆகியும் வரவில்லை. எனக்கு முன்னால் நின்ற பெண் நகம் கடிக்க துவங்கியிருந்தாள்.
நம்மை அறியாமலேயே இயல்பாய் நடக்கும் விஷயம். கல்லூரியில் படிக்கும் போது என் நண்பன் டென்ஷனாகிவிட்டால் தன் கைவிரல் பத்தையும் கடித்து நகமில்லாது போக பக்கத்திலிருக்கு என் விரல்களை கேட்பான். ஆக பலருக்கு நகம் கடிப்பது (onychophagia) என்பது ஒரு டென்ஷன் வடிகால் மாதிரி. சிறு வயதில் கை சூப்பும் வழக்கம் இருக்கும் ஆனால் ஒரு 3-5 வயதுக்குள் நிறுத்தி விடுவோம். ஆனால் நகம் கடிப்பது பலருக்கு நீண்டு கொண்டே இருக்கும்.

கிரிகெட் கடைசி பத்து ஒவர் பாக்கும் பொழுதோ இல்லை சினிமா க்ளைமாக்ஸ், வகுப்பில் தன்னை கேள்வி கேட்டுவிடுவாரோ இல்லை என்னை ஏன் கேட்க்கவில்லை என்றோ, நகத்தை கடித்துக்கொண்டிருப்பார்கள். நகம் கடிக்கிறேன் என்பதே தெரியாமல் இந்த பழக்கம் இருக்கும்.

இந்த நகம் கடிக்ற பழக்கத்த Pablo Picasso இப்படி சொல்லிருக்காரு: I draw like other people bite their nails; எப்படி இருக்கு?

நான் சிறுவனாக இருந்த போது யாரு நகம் வெட்டி விட்டார்கள் என்று யோசித்த போது அப்படி யாரும் வெட்டி விட்டதேயில்லை என்கிற விஷயம் சற்று ஆச்சர்யத்தை கொடுத்தது. பல்லாலே கடித்துதான் துப்பியிருக்கவேண்டும். சற்று வளர்ந்த பின் பர்மா பஜாரில் வாங்கிய ஜப்பான் தயாரிப்பு நகம் வெட்டி வைத்து வெட்டியது ஞாபகமிருக்கிறது. நீல கலரில் ப்ளாஸ்டிக்கில் பூ வேலைப்பாட்டுடன் வெட்டிய பின் ராவி நகத்தை சமன் செய்ய ரம்பத்துடன் பள பள வென்றிருக்கும். பல காலம் அதிலேயே வெட்டிய ஞாபகமிருக்கிறது. என் அண்ணனும் அதில்தான் வெட்டுவான், ஆனால் என் அக்காவுக்கு தேவையில்லை கடித்தே துப்பி விடுவாள்.

ஆனால் இப்போது பாருங்கள் என் பையனுக்கு நகம் வெட்டுவது என்பது எனக்கு மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். ஆனால் அவனோ ஏதோ பெரிய சர்ஜரி மாதிரி ஆர்பாட்டம் செய்துவிட்டுதான் ஒரு வழியாக கையை நீட்டுவான். அதிலும் பல கண்டீஷன்களுடன். கையை தண்ணீரில் நனைத்தால் வலிக்காமல்(!!?) இருக்குமாம். (இது ஒரு சாக்கு, அப்படியே குழாயை திறந்து தண்ணீரில் விளையாடுவதற்கு நல்ல சந்தர்ப்பம்) முதலில் சுட்டு விரலில்தான் ஆரம்பிக்க வேண்டும். சுண்டிவிரலில் வெட்ட கூடாது. வெட்டிய பின் தனியாக இருக்கும் ரம்பத்தால் தானே ராவ வேண்டும். இத்தனையும் இருந்தாலும் அந்த பிஞ்சுக் கரங்களை பிடித்து ஏதாவது கதை சொல்லிக்கொண்டே வெட்டி விடுவது என்பது ஒரு வாத்சல்யமான தருனம். இப்போது வளந்து விட்டான் தானே வெட்டி கொள்கிறான். சில நேரம் அவன் வெட்டுவதை பார்க்கும் போது, படகை செதுக்கிய தச்சன் அது உருவாகி வாழ்கை என்னும் கடலில் செல்ல தயாராவதை கரையில் நின்று பார்பது போல், போது கடந்து போன அந்த சந்தோஷ தருனங்கள் நினைவில் வந்து போகும்.

7 comments:

ILA (a) இளா said...

ஆஹா, என்ன ஒரு உவமை??

Thekkikattan|தெகா said...

கிவியாரே,

அழகா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க, பையனுக்கு நகம் வெட்டி விடுவதனை. அதே சுகத்தை நானும் அனுபவித்தது உண்டு.

ஆனால் அது கொஞ்ச வளர்ந்தவுடன் பேசிக்கொண்டே வெட்டிவிடலாம், அதுக்கும் சிறுகளுக்கு தூங்கும் பொழுது செஞ்சா சிறந்த ஆப்பரரேஷன் :)).

நல்லாருந்துச்சு பதிவு!

துளசி கோபால் said...

உங்களுக்கு ஆயுசு 100.
இப்பத்தான் உங்களைத் தொடர் ஆட்டத்துக்குக் கூப்புட்டு ஒரு சினிமா பதிவு போட்டேன்.

பிஞ்சுக் குழந்தைகளுக்கு நகம் வெட்டும்போது பவுடர் எடுத்து விரல் நகக்கண்களில் நிறைச்சுட்டால், சதையை நோகடிக்காமல் வெறும் நகத்தின் முனைகளை வெட்டலாம்.

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

தாமு said...

கிவியாரே,

அதென்ன படகை செதுக்கிய தச்சன் .

தடுக்கி விழுந்து...ஏதோ... ஏடாகூடமா ஆகி போச்சு.

தனியா நகம் வெட்டிகிதுன்னா.. ஒரு பயந்தான்.. ,

எங்க அப்ப்ஸ் விரலையும் சேத்து வெட்டிரிவாரோன்னு

jeevagv said...

Good one!

மேடேஸ்வரன் said...

//படகை செதுக்கிய தச்சன் அது உருவாகி வாழ்கை என்னும் கடலில் செல்ல தயாராவதை கரையில் நின்று பார்பது போல், //

similar to S.RA vin 'thunaiyelithu' sinthanai !!!!!!!!