வெளவ்வால் பறக்கும் அந்தி வேளை

உடன் வேலை பார்க்கும் ஒரு ஜப்பானிய நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சுமோ மல்யுத்தம் பற்றி பேச்சு வந்தபோது சுமோ மல்யுத்த வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் மிக ஆச்சர்யமாக இருந்தது. சுமோ மல்யுத்த போட்டியில் ஜெயித்தவர் மற்ற விளையாட்டுப் போட்டிகள் போல் கையை காற்றில் குத்தி, பல்டி அடித்து, ஒரு குத்தாட்டம் போட்டு கொண்டாடக் கூடாது. வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த தத்துவத்தை பின்பற்றி வரும் ஒரு கொள்கை. மற்றொரு விஷயம் சற்று நம்ப முடியவில்லை. சுமோ வீரர்கள் மற்ற விளையாடுப் போட்டிக்காக பந்தயம் கட்டுவது கூடாதாம். வெற்றியை கொண்டாடினார், இல்லை மற்ற விளையாட்டுக்காக பந்தயம் கட்டினார் என தெரிந்தால் இவர்கள் சுமோ சங்கத்திலிருந்து ஆள் அனுப்பிவிடுவார்கள். மேலுமொன்று சுமோ வீரர்கள் கார் ஓட்டக்கூடாதாம். ஒருவேளை கார் நசுங்கிவிடும் ஆபத்து இருக்கிறது என்பதாலோ?

மற்ற விளைட்டில் ஈடுபடுவதை அனுமதிக்காத சுமோ சங்க விதியை கிட்டத்தட்ட எழுதப்படாத விதி போல இந்திய மக்கள் கடைபிடிக்கிறார்களோ என எனக்கு தோன்றுகிறது. அதாவது கிரிகெட் தவிர வேறு விளையாட்டே உலகில் இல்லை என்ற ஒரு மனோபாவம். ஏன் என்றால் இதே ஜப்பானிய நண்பர் என்னிடம் கிரிகெட் தவிர வேறு என்ன விளையாட்டில் உஙகளுக்கு விருப்பம் உண்டு என்று ஒரு கேள்வி கேட்டார். ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்றேன், இல்லை நான் பார்த்த அநேக இந்திய நண்பர்கள் கட்டாயம் கிரிக்கெட் பற்றியே பேசுவார்கள் என்றார். ஒரு வகையில் இவர் சொல்வதும் சரிதான். நான் சந்தித்த பல ஐரோப்பியர்கள் இந்தியர்கள் பொதுவாக கிரிகெட் மட்டுமே விளையாடுவார்கள் என்ற ஒரு பொதுவான அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.

என் சொந்த அனுபத்தில், நான் ஐந்தாம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்து பழங்காநத்தம் அருகே சொந்த வீட்டு கட்டி போனதிலிருந்து அதுவரை அறிந்திராத கிரிகெட்டை கற்றுக்கொள்ள வேண்டியதாகிப்போனது. ரேஸ் கோர்ஸ் காலனியின் நடுவே ஒரு மைதானம் இருக்கும். பள்ளிமுடிந்து வந்ததும் வராததுமாக உடனே ஓடி அவரவர் வயதுக்கு ஏற்ப நண்பர்களுடன் குறுக்கும் நெடுக்குமாக கால்பந்தாட்டம் நடக்கும். காலகளில் காலனிகள் எல்லாம் கிடையாது. மூன்று மாடிகள் கொண்ட கட்டிடங்கள் சுற்றிலும் இருக்கும். யாராவது அந்த மூன்று மாடி உயரத்துக்கு பந்தை அடித்தால் “ஹோய் அட்லஸ் டோய்” என்ற கோஷமிடுவார்கள். அடித்தவர் அன்று ஹீரோ. பொங்கல் மற்றும் கோடை விடுமுறைகளில் குழுக்களிடையே போட்டிகள் நடைபெறும். அப்போது பீலே மிகவும் புகழ் பெற்ற ஆட்டக்காரராக இருந்தார். அப்போது டிவியெல்லாம் கிடையாது ஆகையால் பீலே எப்படி இருப்பார் என்பது கூட தெரியாது, ஆனால் “போடா பெரிய பீலே” என்று கிண்டலடிப்பது சதாரணம். இப்படி ஆனந்தமாக கால்பந்தாட்டம் ஆடியவனை வீடு மாற்றம் வேறு வழியின்றி கிரிகெட் ஆட்டத்தை பழக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளியது. புது வீடு இருந்த இடத்தில் எங்கள் வீடும் அருகே மேலும் இரண்டு வீடுகளைத் தவிர வேறு வீடுகளே கிடையாது. வடக்கு பக்கமாக போடிநாயக்கனூருக்கு போகும் இரயில் பாதை. கிழக்கே பைபாஸ் பாலம், மற்றபடி சுற்றிலும் வயக்காடு. இதில் சேர்ந்து விளையாடுவதற்கு பசங்களும் இல்லை விளையாட இடமும் இல்லை.

இரண்டு வருடங்களில் மெதுவே அங்குமிங்குமாக வீடுகள் முளைக்க ஆரம்பித்தன. புதிதாக நட்புகிடைத்தது. ஆனால், ரேஸ் கோர்ஸ் காலனிபோல விளையாட சரியான இடமில்லாமல், இருபது அடி அகல ரோட்டில் விளையாட கிரிகெட்டே சரியானதாக இருந்தது. கையில் கிடைத்த மூன்றடி கட்டையை கிரிக்கெட் மட்டை போல வெட்டி ஒருவன் கொண்டு வந்தான். ரப்பர் பந்து வருவதற்கு முன்பு, சைக்கிள் ரப்பர் குழாயை துண்டு துண்டாக வெட்டி செய்த பந்தை வைத்து ஆடுவோம். சிமெண்ட் மின்சார கம்பம் பல சமயம் ஸ்டம்பாக இருக்கும். கிரிகெட்டில் எல்-போர்டாக இருந்தால் முதலில் பந்துதான் பொறுக்கி போட வேண்டும். பின்பு அவுட்டே ஆகாமல் அழிச்சாட்டியமாக காஜி அடிப்பவர்களுக்கு இருட்டும் வரை பந்து வீச வேண்டும். வவ்வால் பறக்க ஆரம்பிக்கும் அந்தி வேளையில் போனால் போகட்டும் என்று காஜி கிடைக்கும். மூனாவது பந்தில் எதையாவது சொல்லி அவுட் என்று அனுப்பிவிடுவார்கள்.

ஒரு ஒரு கட்டத்தில், விளையாடும் இடத்துக்கு ஏற்ப இது மாறும். பரிட்சை அட்டையையும், ஏதாவது ஒரு பாட்டில் மூடியையும் வைத்து, வீட்டுக்குளேயே இண்டோர் கிரிக்கெட், வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து புத்தகத்தின் பக்க எண்களை வைத்து புக் கிரிக்கெட் என பல வேறு உருவில் எங்கும் கிரிகெட் எதிலும் கிரிகெட். பின்பு தொலைக்காட்சி வந்த பின் முழு நாளும் உட்கார்ந்து ஒரு நாள் போட்டி பார்ப்பது. மறுநாள் அது பற்றி நண்பர்கள் அநிமேட்டடாக பேசுவது என்று கிட்டத்தட்ட சில ஐரோப்பியர்கள் இந்தியர்களை Armchair sportsmen என்று நக்கலாக குறிப்பிடுவது போலவே ஆகிவிட்டோமோ என்று தோன்றுகிறது.

பிரித்தானிய சாம்ராஜ்ய காலனிகளில், இப்படி கிரிக்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட நாடு இந்தியாவும் அதன் அண்டை நாடுகளுமே. இப்போது காமன்வெல்த் போட்டிகளை எப்படிநடத்தி முடிக்க போகிறார்கள் என்று உல்க நாடுகளின் பல ஊடகங்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றன. ஏதாவது சின்ன விஷயம் கிடைத்தால் கூட அதை பெரிய விஷயமாக காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு இங்கு நியுசியின் டிவி3யின் நிருபர் தில்லியில் விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதிகளை காண்பித்து நல்லாத்தான் கட்டியிருக்காங்க ஆனா இன்னும் சரியாக சுத்தம் செய்யவில்லை என்று எங்கிருந்தோ ஒரு எருமை மேயும் காட்சியை காண்பிக்கிறார்கள். டெங்கு காய்சசல் வரக்கூடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள்.

சரியாக பதினாறு வருடங்களுக்கு முன்பு இனஒதுக்கீட்டுக்கொள்கையை அகற்றி ஜனநாயக முறையை மீண்டும் கொண்டு வந்த தென் ஆப்பரிக்கா 1994 வரை விளையாட்டு போடிகளிலிருந்து புறக்கணிக்கப்ட்டாலும், 1995-ல் ரஃக்பி உலக கோப்பை (கொசுறு தகவல்: மார்கன் ஃப்ரீமேன் நடித்து இந்த வருடம் வெளி வந்துள்ள Invictus படம் இதைப் பற்றியதே) மற்றும் இந்த வருடம் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளது. அட இது எல்லாம் ஒரு பெரிய விஷயமா?

இப்ப பாருங்க, எந்திரன் படம் பற்றி பரபரப்பா எதாவது தகவல்கள் வந்துகிட்டே இருக்கு. அதுல ஒன்னு, சங்கர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனிடம் ‘படத்துக்கு 3 செட் போட வேண்டும். அதற்கு சென்னையில் வசதி இல்லை. ஐதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்குதான் போக வேண்டும்’ என்று சொல்ல, மாறன் உடனே உங்களுக்கு எவ்வளவு பெரிய இடம் வேணுமனு திருப்பி கேட்க்க, சங்கர் தன் தேவைய சொன்ன உடனே ஆறே மாதத்தில் பெருங்குடியில் சிறப்பாக மூன்று ஏசி ஃப்ளோர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். இந்த மாதிரி திறமைகளுக்கும், கடின உழைப்புக்கும் இந்தியாவில குறையே இல்லை.

காமன்வெல்த் விளையாட்டை நடத்தி கொடுப்பதற்கே முழி பிதுங்குகிறது. உலக கோப்பையும் (கிரிக்கெட் அல்ல) ஒலிம்பிக்கும் நடக்க வவ்வால் மாதிரி தலைகீழாக தொங்கி கனவு கண்டால் ஒரு வேளை பலிக்குமோ??




0 comments: