இப்படித்தான் ஒருநாள் சங்கரய்யர் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்.
ஏன் இப்போதெல்லாம் யாருக்கும் அசரீரி அதாவது ஆகசவானி அல்லது வானொலி (சென்னை, திருச்சி, பண்பலை அல்ல) கேட்பதில்லை?
அதானே? ஏன்?
அப்பதான் தயங்கி தயங்கி தன் அனுபவத்த பகிர்ந்துகிட்டார்.
ஆழ்ந்த உறக்கம்னு இருக்கலாம். ஆனா முழிச்சிண்டுதான் இருக்கேனான்னும் தெரியல. திடீரென்று ஒரு பரவச நிலை பர பர வென்கிறது உடலெங்கும்..ஏதோ மொன மொன வென ஒரு குரல்..உத்து கேட்டதில்
”ஏய் இனிமே இப்படியேதாண்டா வாழ்க்க உனக்கு” அப்படின்னு சொல்லித்து அந்த குரல். எனக்கு அப்படியே ஸ்வாதிஷ்டானத்திலிருந்து கிளம்பி மணிபூரகத்திலிருந்து அனாகதம் வரை எதோ ஒன்று ஓடறது போல இருந்தது. டப் டப் என ஒரு சத்தம் வேற. ரோட்டில் நடந்தோ அல்லது பைக்கிலோ போகும்போது சரேலென்று மயிரிழையில் லாரியோ பஸ்ஸோ போனால் தூக்கிவாரிப்போடும் பாருங்கோ அப்போ இதயத்தின் ஒலி துல்லியமாக் கேட்க்கும்...அப்படி கேட்டது. ஒரு வேளை இதுதான் சிர்காடியன் ரிதமோ? இல்லை உருவமே இல்லாது குரல் மட்டுமே. பாத்ரூம் கண்ணாடியில் கை கழுவி உதரும் போது சிதரும் நீரும், பல்தேய்க்கும் போது சாறலாக பொழியும் பற்பசை நுரையும் படிந்து மசமசவென மங்கலாக ஷேவிங் செய்யும் போது மிக இடைஞ்சலாக இருக்குமே அப்படி ஒரு தோற்றம் கண்ணுக்கு ஒன்னும் புலப்படலே. (சே காத்தால எழுந்து பாத்ரூம் கண்ணாடியை துடைக்க வேண்டும் இப்படி ஆன்மிக நெலெம்போது எல்லாம் வந்து தொந்திரவாக இருக்கு) காண்ட்ராக்ட் முடிந்து அடுத்த வேலையை தேடிண்டிருகேன் இப்ப இப்படி ஒரு வாய்ஸ். நன்னாத்தான் இருக்கு வேளக்கு சாப்பாடு, வலை வசதி, வலையில் உலா என செளகர்யமாத்தான் இருக்கு ஆனா வங்கிக் கணக்குதான் தேஞ்சிண்டே போரது..ஆனா சட்னு ஒன்னு தோனித்து, நல்ல வேள எனக்கு நல்லா தெரிஞ்ச தமிழ்லயே சொல்லித்து அந்த குரல். ஸ்வாஹீலி அல்லது ஜெர்மேனிய மொழியில் சொல்லியிருந்தால் இது எனக்கான அசரீரிங்கறது கூட தெரியாம போயிருக்கும், அசரீரி யாரிடமிருந்து வரதோ அவா ரொம்ப நல்லவா. இதை எப்படி இப்ப மத்தவாளுக்கு புரிய வெக்கரது? அசரீரி படி வாழ்க்கையை அமைக்கனும், ஆனா என் கஷ்டம் உங்களுக்கு இப்ப புரியும்னு நெனக்கிறேன்...
0 comments:
Post a Comment