தொழில்நுட்ப தொந்திரவு

இரவு ஒரு மணியோ இரண்டு மணியோ "கீங்க் கீங்க்" என்று ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை மொபைலின் ஈனஸ்வரம். இந்த அலறல் பேட்டரியின் சக்தி குறைந்து போகும்போது ஞாபகமூட்டுவதற்காக.

தூக்கத்தை கலைத்த கடுப்புடன் எழுந்து சார்ஜரை இருட்டில் துழாவி கண்டுபிடித்து (தூக்க கலக்கத்தில் லைட் எல்லாம் போட சோம்பேறித்தனம்) அலறிக்கொண்டிருந்த மொபலை சார்ஜிங்கில் போட்டு விட்டு வந்து படுத்தேன். ஒரு நிமிடத்துக்கு பின் மறுபடி "கீங்க்" . மகா கடுப்பாகிவிட்டது. திருப்பவும் எப்படி கத்துகிறது என்று குழப்பம். போவதா வேண்டாமா என்ற யோசனை. காலையில் சார்ஜ் செய்ய நேரமிருக்காது. மொபைல் இல்லை என்றால் கஷ்டம் என்ற பிரக்ஞை வந்து வேறு வழியில்லாமல் எழுந்து என்ன பிரச்சனை என்று பார்த்தால் சார்ஜரின் ப்ளக்கை ஆன் செய்யவில்லை. ஆஹா என்னவொரு அடிப்படை பிழை. ஆன் செய்ததும் "ஙுடு ஙுடு" என்று வேறு ஒரு சப்பத்ததுடன் ஆ இப்பதான் "charging" நைனா என்றது.

வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை, ஆனால் சிந்தனை ஓட்டம் தொடர்ந்து இப்ப இந்த பதிவு வரைக்கும்.... யோசிச்சு பாத்தப்ப மொபைல சார்ஜரில் போட்டதும் அந்த விஷேச சப்தம் சார்ஜரிலிருந்து மொபைலுக்கு சக்தி வருகிரது என்பதை அறிவிக்க. எத்தனை முறை கேட்டிருக்கிறேன். ஆனாலும் கவனிக்கவில்லை. இந்த மாதிரி சப்தம் எதற்கென்றே நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மொபைல் என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் வெளியே செல்வதற்கு முன்பு அது முழுவதும் சார்ஜாகி இருக்க வேண்டும். மொபைல் வந்த புதிதில் இநத மாதிரி ஹை டெக் சமாசாரமெல்லாம் இல்லாமல் சமையத்தில் சார்ஜ் காலியாகி முழித்த சமயமெல்லாம் உண்டு.

ஆக இந்த மாதிரி உபயோகிப்போரிடமிருந்து பெற்ற கருத்து பின்னூட்டங்களை வைத்து இப்போது மென்மேலும் வளர்ந்துகொண்டே போகிறது. ஆனாலும் இப்போதிருக்கும் எந்த கருவியை எடுத்துக்கொண்டாலும் உபயோகிப்பாளரின் தேவைக்கு அதிகமாகவே தொழில்நுட்பத்தை தலையில் கட்டிவிடுகிறார்கள். எத்தனை பேர் தங்களிடம் இருக்கும் ஒரு கருவியை அதன் எல்லா அம்சங்களையும் ஒரு முறையாவது உபயோகப்படுத்துகிறார்கள்? பலருக்கு எதையாவது செய்து உள்ளதும் போவிடப்போகிறது என்ற பயமிருக்கும். அதுலயும் நம்ம மக்கள கேக்கவே வேண்டாம் புதுசா ஒரு காரு வாங்கினா சீட்டுக்கு பேக்டரில போட்ட கவரையே கழட்டாம ஓட்டும் மகா புத்திசாலிகள். இப்போது இந்த மொபைலையே எடுத்துக்கொள்ள்வோம். பேசுவது, டெக்ஸ்ட் அனுபபுவது இந்த இரண்டு மட்டுமே அடிப்படை தேவை. போதாததுக்கு இப்போது வலைத்தொடர்பு. சரி. ஆனா மிக கடுமையான போட்டியினால ரேடியோவில ஆரம்பிச்சு இப்போ mp3, காமெரா, வீடியோ, gps இத்தியாதின்னு நீண்டுக்கிட்டே போயிட்டிருக்கு. கடைசில சில பேர் அவசரத்துக்கு போன் போட்டு பேசரதுக்குள்ள ஆடி போயிடறாங்க. இல்லேன்னா வந்த போன கால எடுத்து பேசரதுக்குள்ள வாய்ஸ் மெசேஜுக்கு போயிடும். அடிப்படை வசதிகளுடனான விலை குறைந்தவற்றை சந்தையிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். அது பழசு இது புதுசு என்று. உனக்கு இப்போது இதுதான் தேவை என்ற முடிவுடன். பழசுக்கு எந்த ஒரு ஆதரவோ உதவியோ இல்லை உபரி பாகமோ ஒரு இழவும் கிடைக்காது.

ஆனல் தொழில்நுட்ப்பத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொன்றையும் மிக நுட்பமாக யோசித்து செய்கிறார்கள். இந்த சார்ஜ் குறைந்தால் சத்தம், சார்ஜரை மாட்டியவுடன் ஒரு வித சப்தம், சார்ஜ் ஆன பின் வேறு வித சபதம். இத்தனைக்கும் பின்னால் எத்தனை ஆராய்சிகள் நடந்திருக்கும்? இன்றைய காலகட்டத்தில் சில தொழில்நுட்பங்கள் நுகர்வோரின் வேண்டுதலுக்காக கொண்டுவருவதில்லை. ஆதை கண்டுபிடித்ததற்காக. அதற்கான ஆராச்சிக்காக செலவழித்ததை மீட்டு எடுப்பதற்காக புதிதாக எதையாவது சேர்த்துக்கொண்டே இருப்பது. சரி ஏன் ஆராய்ச்சி? சந்தையில் இருக்கும் கடும் போட்டியில் புதிதாக எதையாவது கொண்டுவந்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக. ஆக வாடிக்கையாளராகிய நமக்கு "உனக்கு இது தேவை" என்று அனேகமாக நிறுவனங்கள் முடிவுசெய்கின்றன. சந்தையில் புதுசு என்றால் அது நமக்கு மிகவும் தேவைதான என்று யார் யோசிக்கிறார்கள்? பல சமயம் அந்தஸ்தை நிலை நிறுத்த நமக்கு தேவையில்லததையும் வாங்குவோம்.

இது வேணும், அதுவும் வேணும்...இன்னமும் வேணும்..

மனிதனின் தேவைக்கு எல்லை, தன்னையே முற்றிலுமாக அழித்துக்கொள்ளும் வரை!.

1 comments:

Anonymous said...

//மொபைல் என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் வெளியே செல்வதற்கு முன்பு அது முழுவதும் சார்ஜாகி இருக்க வேண்டும்//
இந்தியால எனக்குத்தெரிஞ்ச ஒருத்தங்க, குளிக்கப்போகும்போது கூட செல்லை கையில எடுத்துட்டுப்போற அளவுக்கு பைத்தியம்.ஏன் கேக்கறீங்க. இதுங்க எல்லாம் எப்ப பைத்தியம் தெளிஞ்சு.. ம்ம்ம்