உழவன் மகன் பர்ன்ஸ்

இன்று ஸ்காட்லாந்தின் தலைசிறந்த கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பிறந்த தினம்.(25 Jan 1759). ஸ்காட்லாந்து கெலிக் மொழியில் தொழில்முறை கவிஞரை The Bard என்று அழைப்பது வழக்கம். தன் கவிதைகளால் இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியையே கொண்டுவந்த பர்ன்ஸ் உலகெங்கிலும் கொண்டாடப்படுபவர்.


கிட்டத்தட்ட250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவி என்றாலும் இவர் பிறந்ததினத்தன்று பள்ளிகளில் குழந்தைகள் இவரின் கவிதைகளை படித்து ஒப்புவித்தலும், பல அரசாங்க அலுவகங்களில், கல்லூரிகள், பல்கலைகழங்களில், இன்னும் பலர் தங்கள் இல்லங்களில் இவர் பிறந்த நாளன்று பர்ன்ஸ் தினம் மற்றும் பர்ன்ஸ் இரவு என ஸ்காட்லாந்தின் புகழ் பெற்ற ஹாகிஸ், ஸ்காட்ச் விஸ்கியுடன் இவரின கவிதைகளை வாசித்து மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்.

பர்ன்ஸ் பெரும்பாலும் காதல் கவிதைகளையே எழுதியவர். இன்று ஒரு கலாச்சார சின்னமாக கருத்தப்படுபவர். இவர் எலிக்காக எழுதிய கவிதை மிகவும் பிரசித்தி பெற்றது.

இதையெல்லாம் பார்க்கும் போது ஏனோ மனம் ஒரு பெருமூச்சுடன் நம் மகா கவிகளையும் நினைத்து பார்க்கிறது. எத்தனை பேர் கம்பராயணத்தில் ஒரே ஒரு பாடலையாவது வருடத்தில் ஒரு நாளாவது படிப்பார்கள்? அவ்வளவு தூரம் போக வேண்டாம், பாரதியோ இல்லை பாரதிதாசனையோ படித்து கொண்டாடலாம். இப்போதிருப்பது போல் பாட புத்தகத்திலும், தெருவுக்கும், பல்கலைகழகத்துக்கும் இவர்கள் பேரை வைத்துவிட்டு அவர்கள் செய்த கவிதைகளை மறந்து விடுவோம் போலிருக்கிறது.

கொசுறு: கிருஸ்துமஸ் விற்பனை எல்லாம் ஓய்ந்து சூப்பர்மார்க்கெட் பழைய கதிக்கு ஜனவரி முதல் வாரத்தில் திரும்பியதும், பர்ன்ஸின் கவிதை தொகுப்பை கெட்டி அட்டையில் இரண்டே பவுண்டுகளுக்கு விற்றார்கள். மக்கள் பர்ன்ஸ் இரவு படிக்க வேண்டி வாங்கிச் சென்றனர்.

0 comments: