Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

இடம் பெயர்

பொய்த்து போன மழையாலோ
இல்லை வெய்யிலாலோ
துளிர்ப்பதும் பூப்பதும் குறைந்தபோதும்
அலையும் காற்றை நுகர்ந்து
பெரும் நம்பிக்கை கொண்டு அங்கேயே நிற்கும் மரம்;
குறைந்து போன வருவாயும்
பங்கு சந்தை சரிவாலும்
மதிப்பிழந்து போன பணத்தாலும்
வேலையிழந்து போனதாலும்
மனமொடிந்து குடிபெயரும் திட்டம்
மனித மனம் மட்டுமே உருவாக்கும்
மரங்கள் என்ன நகர்ந்தா போய்விடும்?

உழவன் மகன் பர்ன்ஸ்

இன்று ஸ்காட்லாந்தின் தலைசிறந்த கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பிறந்த தினம்.(25 Jan 1759). ஸ்காட்லாந்து கெலிக் மொழியில் தொழில்முறை கவிஞரை The Bard என்று அழைப்பது வழக்கம். தன் கவிதைகளால் இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியையே கொண்டுவந்த பர்ன்ஸ் உலகெங்கிலும் கொண்டாடப்படுபவர்.


கிட்டத்தட்ட250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவி என்றாலும் இவர் பிறந்ததினத்தன்று பள்ளிகளில் குழந்தைகள் இவரின் கவிதைகளை படித்து ஒப்புவித்தலும், பல அரசாங்க அலுவகங்களில், கல்லூரிகள், பல்கலைகழங்களில், இன்னும் பலர் தங்கள் இல்லங்களில் இவர் பிறந்த நாளன்று பர்ன்ஸ் தினம் மற்றும் பர்ன்ஸ் இரவு என ஸ்காட்லாந்தின் புகழ் பெற்ற ஹாகிஸ், ஸ்காட்ச் விஸ்கியுடன் இவரின கவிதைகளை வாசித்து மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்.

பர்ன்ஸ் பெரும்பாலும் காதல் கவிதைகளையே எழுதியவர். இன்று ஒரு கலாச்சார சின்னமாக கருத்தப்படுபவர். இவர் எலிக்காக எழுதிய கவிதை மிகவும் பிரசித்தி பெற்றது.

இதையெல்லாம் பார்க்கும் போது ஏனோ மனம் ஒரு பெருமூச்சுடன் நம் மகா கவிகளையும் நினைத்து பார்க்கிறது. எத்தனை பேர் கம்பராயணத்தில் ஒரே ஒரு பாடலையாவது வருடத்தில் ஒரு நாளாவது படிப்பார்கள்? அவ்வளவு தூரம் போக வேண்டாம், பாரதியோ இல்லை பாரதிதாசனையோ படித்து கொண்டாடலாம். இப்போதிருப்பது போல் பாட புத்தகத்திலும், தெருவுக்கும், பல்கலைகழகத்துக்கும் இவர்கள் பேரை வைத்துவிட்டு அவர்கள் செய்த கவிதைகளை மறந்து விடுவோம் போலிருக்கிறது.

கொசுறு: கிருஸ்துமஸ் விற்பனை எல்லாம் ஓய்ந்து சூப்பர்மார்க்கெட் பழைய கதிக்கு ஜனவரி முதல் வாரத்தில் திரும்பியதும், பர்ன்ஸின் கவிதை தொகுப்பை கெட்டி அட்டையில் இரண்டே பவுண்டுகளுக்கு விற்றார்கள். மக்கள் பர்ன்ஸ் இரவு படிக்க வேண்டி வாங்கிச் சென்றனர்.

வழியில் சந்தி

வானிலை வல்லுனர்களின் கனிப்பை பொய்யாக்காமல் மிகச் சரியாக இந்த வருடத்தின் முதல் பனி கொட்ட ஆரம்பித்துள்ளது. முதலில் சட சட வென வேகமாக விழத்தொடங்கி விழந்த வேகத்திலேயே தண்ணீராகி, பின் சற்று நிதானித்து, ஜவ்வரிசியை கொட்டியது போல் மாறி, பின் சற்று வேகம் குறைந்து வெண்பஞ்சை பறக்க விட்டது போல் உருக்கொண்டு, அதன் பின் இன்னும் நிதானமாக பறவையின் இறகு போல் மெதுவே அசைந்து அசைந்து விழ, இந்த இடத்துல பிரமிளின் கவிதை ஏனோ நினைவுக்கு வருகிறது..



சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது
பனிவிழும் சமயம் ஒருவித பேரமைதி நிலவும் அது அனுபவித்தால்தான் புரியும்...

பாதைகளே இல்லத பறவையின் வாழ்வு எப்படியிருக்கும்?? நீண்ட நேர் பாதை என்றால சிக்கலே இல்லை, ஆனா ஒரு சந்தி வந்து சேர்ந்தால் பிரச்சினையாகிவிடும், எப்படி? இப்படி ராபர்ட் ஃப்ராஸ்ட் Road Not Taken என்ற கவிதையில் சொன்னா மாதிரி..

TWO roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveller, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less travelled by,
And that has made all the difference.

சூட்சுமம்

பாதைகள் பல்லாயிரம்
இலக்கு ஒன்றுதான்
எல்லா மதமும் கூவுகிறது;
பாதை காவலர்கள்
உங்களை நெகிழ்விக்க
மாயங்கள் வித்தைகள் ஆச்சர்யங்கள்
கதைகள் பல கூறுவார்கள்
அன்பாய் மிரட்டவும் செய்வார்கள்;
எல்லாம் வல்ல மாயை
என்று நடுப்பாதை போடும்
நவீன புனிதர்கள்;
உண்மை எதுவென்றறியாது
சீனத்துக்காரனின் சிந்தனையில் சிவனோ
ஹங்கேரியன் கனவில் ஹரியோ
தோன்றியதாக தெரிந்தால்
ஒரு வழி கிடைக்கலாம் என்ற
பகுத்தாயும் மனத்தை அடக்கி
பக்தியில் பாய்ந்துவிட்டால் மோட்சம்
இல்லை இங்கும் அங்குமாய் வேஷம்;
சுடர்விடும் அறிவிங்கு இடரே
நிச்சயமற்ற கோட்பாட்டுக்கிணங்க
உணர்ந்தால் விளக்க இயலாது
விளங்கினால் உணர முடியாது.

தமிழ் சினிமா பற்றி பாரதிதாசன்

சமீபத்தில் ஒரு பாடலுக்காக பாரதிதாசன் படைப்புகளை புரட்டிக்கொண்டிருந்த போது புதிய உலகம் தொகுதியில் "தமிழ்நாட்டிற் சினிமா" என்னும் தலைப்பில் இந்த கவிதையை எழுதியுள்ளார்.

சினிமா எப்படிஇருக்கும் என்று, ஒரு சினிமாவை பார்த்துவிட வேண்டும் என்று மிக ஆவலாக இருந்திருக்கிறார் பாவேந்தர். அதனை இப்படி வெளிப்படுத்துகிறார்:

திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்,
"இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்" என்றுபல நினைத்தேன்.
ஒலியுருவப் படம்ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்.

பின்பு பேச்சில்லா ஆங்கிலப்படத்தை கண்டு மெய்மறந்ததை இப்படி
வெளிப்படுத்துகிறார்:

புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்.
உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி,அதில் இயற்கையெழில் கண்டேன்!
கதைமுடிவில் யுபடம்ருஎன்ற நினைவுவந்த தன்றே!


அதன் பின் இந்தியாவிலும் சினிமா தொழில் நுட்பம் பெருகி பல பேசும் படங்கள்

வெளியாக தொடங்கி அது தமழிலும் வந்தபோது,
"இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்

எதிர்வைக்கும் நாள்எந்நாள்"
என்ற கனவுக்கு நேரெதிராக வந்த படங்களை கண்டு இப்படி எழுதுகிறார்:

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!
மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!


இன்று தமிழ் படங்கள் சில மாறுதல்கள் அடைந்தாலும், அத்திம்பேர் தமிழ் இல்லை, இந்துஸ்தான், தெலுங்கு பாடல் இல்லை, பரமசிவன் இல்லை, ஆனால் பாவேந்தர் கூறியதுபோல்
மற்றவைவெல்லாம் அப்படியே உள்ளன. மேலும்,

படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!



என்று மிக நொந்து போய் இருப்பது இன்றளவும் நிறைவேரவில்லை.



என் அம்மா வளையம் விடுவாள்

மிகவும் அன்பானவள்
என் அம்மா
அப்பாவை தூர வைத்துவிட்டு
எனக்காக வாழுகிறாள்
எங்கு போனாலும்
தூக்கிச் செல்வாள்
இன்றும் அமர்ந்திருக்கிறேன்
அவள் இடுப்பில்
என் முகத்தை
வருடிச் செல்லும்
அவள் விட்ட
புகையில் முளைத்த
வளையம் சொல்லும்
என் அம்மா
மிகவும் அன்பானவள்.

அகழ்வாராய்ச்சி-3


லஞ்சப் புலம்பல்


அதைச் செய்வதற்காக
அமர்த்தப்பட்டிருந்தாலும்
அது உன் கடமையென்றாலும்
'எனக்காக' நீ செய்வதும்
அது கண்டு நான்
'அன்புடன்' கொடுப்பதும்
உன்னைக் காட்டி
என்னைக் காட்டி
நம் பின்னே
ஆட்டுக் கூட்டமே வந்தாலும்
இன்னும் சிலர் மட்டும்
இதை லஞ்சம் என்றே
புலம்புகின்றனர்
என்ன செய்ய?

-----------------------------------------

நகலாளர்கள்

சாப்பிடத் தெரிந்த
எல்லோருக்கும்
சமைக்கத்தெரியாது
சுயமாய் சுவையாய் சமைப்பவர் சிலர்
பார்த்து சமைப்பவர் மேலும் சிலர்
காரம் கூடியும்
உப்பு குரைந்தும்
சுமாராய் சமைக்கும் மற்றும் பலர்
இவர்களால்
உண்ணுவோருக்கு ஊறேதுமில்லை
சமைத்தவனிருக்க
தான் சமைத்ததாகக்
கூறும் கூட்டமிருக்கிறதே
அது ஆபத்தானது
உண்ணுவோர் கவனிக்க.

--------------------------------------------


சும்மாக் கவிதை

அடிக்கடி பார்க்கிறவரை
அகஸ்மாத்தான் இடத்தில்
கண்டபோது
'எங்கே இந்த்ப்பக்கம்' என்றாய்ந்த போது
- சும்மா என்றார்.
தபாலாபிஸில் கண்டவர்
சும்மா தெரிந்தவருக்கு
கடிதமெழுதுவதாகவும்
பஸ்ஸில் கண்டவர்
சும்மா கடைக்குப் போவதாகவும்
கோவிலில் கண்டவர்
சும்மா கும்பிட வந்தாகவும்
தியேட்டரில் கண்டவர்
சும்மா படம் பார்க்க வந்ததாகவும்
ஹோட்டலில் கண்டவர்
சும்மா சாப்பிட வந்ததாகவும்
இப்படி பல பேர்
சும்மா எடையெதையோ செய்ய
நானும் சும்மா இப்படி..

அகழ்வாராய்ச்சி-2

மேலும் தோண்டியதில்


மழைக்கூ

பளிச்சிடும் மின்னலில்
பூத்தது ஆயிரம் பூ
என் குடையில்.


முன்னேற்றம்

சோடியம் வேப்பர் இலையில் வழியும்
அரசமரத்துக் கீழ்
எப்போதும் புன்னகையுடன்
பிள்ளையார்.



வாழும் கணக்கு

எட்டடிக்கு மூன்றடி
நிலப்பரப்பின்
மூலையில்
ஒரு ஜான் கயிறு
கொண்டு கட்டப்பட்ட
மாடு மேயும்
பரப்பளவு என்ன?
என்று ஏழாம் வகுப்பில்
போட்ட கணக்கின் விடை
ஐயா! நடு வயதில்
இப்போது
புரரிகிறதய்யா.



Ego

புறத்துக்கு நான்
என்னை காட்டியிருக்கும்
அடையாளம்
அகத்துள் விரியும்
வெறுமை
சிதைத்துவிடுமோ
என்றஞ்சி,
கடந்த காலத்தை
பகைத்துக்கொண்டு,
நிச்சயமில்லா
எதிர் காலத்தில்
காட்டிய அடையாளத்தையே
காப்பற்ற வேண்டி,
நழுவிப் போகும்
நிகழ் காலத்தில்
நித்திய அவதி.


பிகு: திருமா, மருத்துவர் , ஏனையர் பொருத்தருள எல்லாம் வல்ல...

நவீன யுவன்

பட்டப் படைக்கிற வெய்யிலில்
பாழாய் போன ப்ஸ்ஸிற்க்காய் காத்திருந்து
காலியாய் வந்ததை தவிர்த்து
கால் வைக்க இடமில்லாது வந்ததில்
ஒற்றைக் கால் வைத்து ஏறி
"உழைத்து உழைத்து" முன்னேறி
உருப்படி ஒன்றும் இல்லாது போக
மூக்குக்கண்ணாடி முழுதும் முன்னாலிருப்பவன்
தலை எண்ணெய்யாகிப் போக
யாரோ விட்ட காற்றுக்கும்
கழுத்தில் பட்ட மூச்சிற்கும்
ஆராய் பெருகும் வியர்வைக்கும்
நொந்து கொண்டு
எச்சில் தொட்டு
கிழித்து கொடுத்த டிக்கெட்டை
மடித்து பையில் வைத்து
போனதும் குளிக்க
வேண்டும் என நினைத்துக்கொண்டான்

--------------------------- அக்டோபர், 1994

அடுத்த தலைமுறை

இப்பல்லாம் நாம் தமிழ்ல கேட்டா புள்ளாண்டன் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிரார். என்ன செய்வது? ஆகா ஆங்கிலத்துல வெளுக்கிறானே என்று மயங்குவதா இல்லை இப்படியே போனால் இன்னும் 2 வருஷத்ல் சுத்தமா தமிழ மறந்துருவான்னு வருத்தப்படறதா? (இதே மாதிரி இக்கடான் நிலைதான் பலருக்கும்).. இதப்பத்தி யோசிச்சப்போ
அம்பிகை பாகன் எப்பவோ எழுதிய கவிதை ஞாபகம் வந்தது... அது இங்கே:



இன்று நல்ல குளிர் நாள் எது நல்ல "புள் ஓவர்"
என்றாய்ந்த பத்து வயதினளை - சென்றணைந்து
அன்னை தனதன்பால் "ஆஷா இதைப்போடேன்"
என்று சொன்ன சொல்லை சகியாமல் - சின்னவளோ
"லெற்மீ எலோன் மம்மி லெற்மீ டிசைட்" என்றாள்
சற்றே மயங்கினாள் தாய்.


(நன்றி அம்பிகை பாகன்)

அகழ்வாராய்ச்சி..

தோண்டியதில் கிடைத்தது. (வீட்லதாங்க, எப்பவோ நாம மும்பாய்ல வாழ்ந்தப்ப அப்பப்ப தோணினத எழுதிவெச்சது, இப்போ எதையோ தேடப்போய் கிடைத்தது. சரி ஒன்னொன்னா வலையேத்திரதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்டா இவனுக்கு இது இப்போ கையில கிடச்சதோன்னு நீங்க நினைக்க மாட்டீங்க, அது உங்க பெரிய மனசு.)




இருத்தலியல்




ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே
வெட்டி அடுக்கப்பட்ட மரங்கள்
பெய்து ஓய்ந்த மழையில்
வளர்ந்திருந்தது
பச்சை மரத்தில் பாசியும்
காய்ந்த மரத்தில் காளானும்
காளான் என்னவோ
அழகாகவே இருந்தது.

----------------------------
ஆகஸ்ட், 1992

வாழ்க்கையெனும்..

விசாலமான கூண்டின்
மூலையில் அமர்ந்து
வாலில் எதையோ தேடிக்கொண்டிருந்தது
அருகே பார்த்துவிட
ஆவல் கொண்டு
இரும்புக் கம்பிகளுக்கிடையே
முகம் புதைத்து
கையை ஆட்டியும்
சத்தம் கொடுத்தும்
குச்சியொன்றை வீசியும்
கவனிக்காதிருப்பது கண்டு
கையிலிருந்த பொரியையும் வீசி
அது செய்த அலட்சியத்தால்
கோபம் கொண்டு
விலகிப்போக எத்தனிக்கையில்
நிமிர்ந்து பார்த்த
அதன் முகபாவம்
என்னைப் பாத்து
சிரித்த மாதிரி இருந்தது

---------------------------
ஜூலை 1998
தோன்றிய இடம் அண்ணா வனவிலங்கு அருங்காட்சியகம், சென்னை.

மூப்பு

மிகச்சில ஆத்மாக்கள் தப்பிப்போகும்
இந்நிலை ஒரு தவம்
அகமிழுத்த இழுப்புக்கு ஆடிய
புறம் புலம்பும் தருணம்.
கர்வம் ஆட்டுவித்த பொம்மலாட்டத்தை
அடக்கவோ இன்னும் ஆடவோ
முடியாமல் தடுமாறும் கணம்.
அனுபவத்தை ஆசானாக்கி
ஏன் வந்தோம் எங்கு போகிறோம்
என்ற பிரக்ஞை வாய்த்தோர்
பயணம் எளிது;
குறுக்காக விரும்பியதை அடைந்துவிட
பாதயை தொலைத்துவிட்டு
பயணம் மட்டும் மேற்க்கொள்ள
வந்த மற்றோர்
புவியில் பாரமே;
இருப்பினும் நளைக்கும்
நானிருப்பேன் என்ற மெல்லிய
நுலிழையில் நிராசைகளை
மாலையாக்கி சூடிகொண்டுவிட
தினமும் துடிக்குது ஆவி.