Showing posts with label ந.ந. Show all posts
Showing posts with label ந.ந. Show all posts

நடந்தவை நடப்பவை-14

என்ன பெரிசா ஒண்ணும் நடக்கல, வட துருவத்துல இருந்து தென் துருவத்துக்கு மாறினத தவிர. வளர்ந்து வரும கோடை காலத்திலிருந்து உச்சத்திலிருக்கும் பனிக்காலத்துக்கு புகுந்ததால் உடலும் மனமும் சற்று அசுவாச படுவதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது.

ஒரு முறைகு இரண்டு முறையாக விமான பயணத்தின் போது ஹிந்து சைவ உணவு என கேட்டுக்கொண்டாலும், அது என்னவோ அந்த வேண்டுகோள் எப்படியோ குளறுபடியாகி பயணத்தின் போது, மேசையில் சிக்கனோ இல்லை மாமிசமோ போட்ட உணவை காது வரை சிரிப்போடு கொண்டு வைத்து விட்டு, “Enjoy your meal" என்று சிப்பந்தி சொல்லும் போது வரும் ஆற்றாமையை தவிர்க்கவே முடியாது போலிருக்கிறது. இந்த மேம்பட்ட சேவையை இந்த முறை வழங்கியவர்கள் வளர்ந்து வரும் கொரியன் ஏர்வேஸ். வாழ்க வளமுடன்.

வந்ததும் கவனித்தது, முன்னூற்றி சொச்சம் தமிழ் பேசும் மக்களுக்கு, ஏற்கனவே இருந்த வெலிங்டன் தமிழ் சொசைட்டியையும், வெலிங்டன் தமிழ் டாக்கீசையும் தவிர புதிதாக முத்தமிழ் (??) மன்றம் என்றுஒன்று முளைத்து அவர்கள் நடத்தும் பட்டிமன்றத்துக்கு வரச்சொன்னார்கள். இப்பத்தான்யா நாட்டுக்குள்ள வந்தேன், அடுத்த முறை அவசியம் வருகிறேன் என்று கூறிவிட்டேன். எனினும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் நல்ல தமிழில் பேசினார்கள் என்று கேள்விப்பட்டேன், இது மிகவும் வரவேற்க தக்கது.

உடனடியாக வாங்கியது கைப்பேசி சேவை. இது இல்லா விட்டால் ஒரு வேலையும் ஆகாது. இந்த சேவையை வழங்குபவர்கள், டெலிகாம் மற்றும் வோடாஃபோன் என இரண்டே நிறுவனங்கள் இருந்தது. இப்போது இவர்களுக்கு போட்டியாக 2டிகிரி (ட்டுடிகிரி என வாசிக்கவும்) என புதிதாக ஒன்று வந்திருக்கிறது. மிக குறைச்சலான விலையில் சேவை வழங்குவதால் ஒரே வருடத்தில் பல பேர் இதில் சேர்ந்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இது யுக்கே பார்டிதான் என உறுதியாக சொல்ல முடியும். உதாரணத்துக்கு இந்த லோகோவை பாருங்கள்.

இது யூக்கேயின் O2 மொபைல் நிறுவத்தின் லோகோ


இது நியுசியுன் புதிய ட்டுடிகிரி நிறுவனத்தின் லோகோ.

இரண்டும் O-வும் இடம் மாற்றி, அதாவது ஒருவித கண்ணாடி பிம்பம் போல். என்னமா யோஸ்ச்சிருக்காய்ங்க பாருங்க.

மற்றபடி இப்போதைய முதல்வர் ஜான் கீ காலையில் TVNZல் ஒலிப்பரப்பாகும் ப்ரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தினமும் வந்து என்னா நடந்தது ஏது நடந்தது என நேரடியாக ஒரு செய்தியாளர் ரேன்சுக்கு சொல்வதால் சற்று நம்பும்படி இருக்கிறது.

நந தொடரும்..

நடந்தவை நடப்பவை-13

வேல்ஸ் இளவரசன் வில்லியம் (அப்பா சார்லஸ்ஸ எப்ப அரசனாவாரோ??) நியுசி சுற்று பயனத்தின்போது ஒரு வழியாக நியுசியின் உச்சநீதி மன்றதிற்கான கட்டிடத்தை வெல்லிங்கடனில் இந்த வாரம் 18ம் தேதி மூக்கு உறசல், ஹக்கா டான்ஸ் ஆட்டுத்தோல் போர்வை சகிதமாக திறந்து வைத்திருக்கிறார். கட்டிடத்தை திறந்து வைத்து, ராணிக்கும் நியுசிக்குமான பாத்யதையை சொல்லி அதாவது இப்பவும் ராணிதான் நியுசியின் தலைவி என்று, ஒரு இடத்தில் கூட குடியரசு (ரிப்பப்ளிக்) என்ற வார்த்தை வந்துவிடாமல் மிக கவனமாக பேசியிருக்கிறார்.

இந்த உச்ச நீதிமன்றம் 2004ல் தான் செயல் படத்துவங்கியது. அதற்கு முன்புவரை உயர்நீதிதான் அதுக்கு மேல லண்டனில் உள்ள Judicial Committee of Privy council என்னும் ராச பரிபாலன குழுவிடம் தான் போகவேண்டும் என இருந்தது. அங்குமிங்குமாக நியுசியை குடியரசா மாத்தி, வேர தேசிய கொடியும், நல்ல டியுன்ல ஒரு தேசிய கீதமும் வேணும் என முனுமுனுப்பு நாட்டுக்குள்ள இருக்கு. எப்ப நடக்குமோ, இன்னும் கடவுளே ராணிய காப்பாத்துன்னுதான் பாடிக்கிட்டு இருக்காங்க.


நேற்று இரவு Channel 4ல் யுக்கேயின் புகழ் பெற்ற நளமகாராசா Gordon Ramsey ன் தொடரான Gordon's Great Escape இந்திய சுற்றுப்பயனத்தின் ஒரு பகுதியில், ஒரு நாளுக்கு மேல் அசைவ உணவு இல்லை எனறால் உயிர் வாழ்வது கடினம் என்கிற கொள்கையுள்ளவர் சைவ உணவே யோகத்துக்கு உகந்தது என சொல்லும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையத்தில் தங்கி 4 நாட்களுக்கு சைவ உணவை மட்டும் சாப்பிட்ட அந்த மகோன்னத நிகழ்ச்சியை காட்டினார்கள்.

மூச்சுக்கு மூச்சு F**K என சொல்லும் இந்த நாட்டு பிரஜையாதலால் மும்பையில் காரமாக எதையோ சாப்பிட்டு விட்டு F***ng hot, f***ng spicy என ஆரம்பித்தது, யோக மையத்தில் ஒரு நாள் முழுவதும் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டதால் தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை ஒப்புக்கொண்டு, சைவ உணவின் மேன்மை பற்றி சத்குருவிடம் கேட்ட பிறகு I think he is f***ng nuts என படு கேஷுவலாக சொல்ல முடிகிறது. பனை மரத்தில் ஏறி கள் இறக்கிய பாபுவிடமும், டாக்ஸி ட்ரைவரிடமும், புகழ் பெற்ற உணவு நிபுணரான ராஷ்மி உதய் சிங் இடமும் ஒரே மாதிரி பேசும் Gordon அதே அலைவரிசையில் ஜக்கி வாசுதேவையும் எதிர்கொள்ள முடிகிறது. Gordon பாஷையில் he is f**ng nuts! பாவம் மனுசன் 4 நாள் ஈஷா மையத்தில் இப்படி சைவ சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்திருக்கும் போல, கண்ணில் ஆர்வம் பொங்க அவர் அடுத்து கிளம்பி போனது கேரளாவில் கறி மீன் உண்ண.

இந்த வருடம் தேர்தல் இருப்பதால் கன்சர்வேடிவ்வும், லேபர் கட்சியும் மாற்றி மாற்றி காலைவாரும் அறிக்கையும், இதெல்லாம் சாத்தியமா என்று யோசிக்காமல் வாக்குறுதிகளை அள்ளி விடுவதுமாக இருக்கிறது. ப்ரெளனும் டார்லிங்கும் எப்படியோ சம்பந்த பட்டவர்களை நெருக்கி யுக்கே வேலையில்லாதவர்கள் எண்ணிக்கையில் 7000(!!) குறைந்து தற்போது 2.46 மில்லியன் மக்களுக்கு வேலையில்லை என்று ஒரு புள்ளிவிவரம் நேற்று வெளியிட்டுள்ளார்கள்.

தினமும் ஏதாவது கம்பெனியோ இல்லை அராசாங்க நிறுவனமோ, வங்கியோ ஆள் குறைப்பு என நூறு ஆயிரம் என வீட்டுக்கு ஆனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். முன்னுக்கு பின் முறனான புள்ளிவிவரங்கள். இதற்கிடையில் எப்படி இந்த 7000 எண்ணிக்கை வந்தது என, `இதெல்லாம் கொஞ்சாம் ஓவரா இல்ல` என்று எப்ப நம்ம வேலை போகுமோ என இருக்கும் மக்கள் தலையை சொறிந்து யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நடந்தவை நடப்பவை-12

மீண்டும் ஒரு பனிக்கால துவக்கம். சென்ற பனிக்காலத்தை விட இந்த வருடம் மழை கம்மி என மதிய உணவு, இல்லை டீ குடிக்கும் இடைவேளையில் ஒரு பேச்சு துவக்கியாக பருவகாலத்தை பற்றி அங்கலாய்க்கிறார்கள்.

`அப்பா எங்களுக்கே எப்படா வெய்யில் அடிக்கும்னு ஆகிப்போச்சு`

நேற்றிலிருந்த் பரபரப்பாக பேசப்படும் இன்னொரு விஷயம் தியரி ஹென்றியின் கையால் போடப்பட்ட கோல். மரடோனாவுக்கு பின் மறுபடியும் நிகழ்வதால் இதை Hand of God part 2 என்கிறார்கள். இதனால் அயர்லாந்தை தோற்கடித்து ப்ரான்ஸ் 2010 உலக கோப்பை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. அயர்லாந்து FIFAவிடம் மறுபடி விளையாட வைத்த கோரிக்கையை, நடுவரின் முடிவு இறுதியானது என நிராகரித்து விட்டது.

இதனால் கிரிக்கெட் டென்னிஸ் போல கால்பந்தாட்டத்திலும் மூன்றாம் விடியோ நடுவர் கொண்டுவரலாமா கூடாதா என விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் விளையாட்டை நிறுத்தி, நிதானமாக பெரிய திரையை பார்த்துகொண்டு கோலா இல்லியா, கையால போட்டானா என்றா பார்த்துகொண்டிருக்க முடியும் என என்று இங்கிருக்கும் பரம கால்பந்தாட்ட ரசிகர்கள் அபிப்ராய படுகிறார்கள். கிரிக்கெட் மாதிரி விளையாட்டுக்கு வேண்டுமானால் அது சரிப்பட்டு வரும். அவுட்டா இல்லியா என்று முடிவு தெரிவதற்கு முன், ட்ரின்க்ஸ் குடித்து, நகர்ந்துபோய் தொந்திரவு மண்ணும் கவட்டைகார்டை சரி செய்து கொண்டு, அவிழ்ந்த் போன ஷூ லேசை கட்டிக்கொண்டு என சாகவாசமாக விளையாட்டை தொடர முடியும்.

மனித திறனின் வரையரைக்கு உட்ட பட்டே இந்த மாதிரி விளையாட்டுக்கள் இருக்க வேண்டும். என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும், இப்ப இந்த ஹென்றி மாதிரி கையால கோல் போடுற மாதிரி நிலை வரும் போது, அந்த தனி நபரின் நேர்மை இனி சந்தேகிக்கப்படும்.

1956-வரை ஓடிக்கொண்டிருந்த ட்ராம்களை அப்போது வந்த டீசல் பேருந்து கவர்ச்சியாக இருந்ததால் பிடிங்கி வைத்துவிட்டார்கள். இப்போது மறுபடி சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடித்து மற்ற ஐரோப்பிய நகரங்களில் இருப்பது போல் எனக்கும் ட்ராம் வேணும் என எடின்பரோவின் ராசகுமார தெருவை ட்ராம் வண்டிக்காக தோண்டி, இப்படி இருந்ததை


இப்படி ஆக்கிவிட்டார்கள்.


வாரா வாரம் இந்த ராசகுமார வீதிக்கு போகும் சாலைகளில் போக்குவரத்தை வெவ்வேறு திக்கில் திருப்பி விட்டுவிடுவார்கள். கிட்டதட்ட வானிலை அறிக்கை மாதிரி எப்படி திருப்பி விடுவார்களோ என்ற குழப்ப நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் பாடு பரவாயில்லை சுற்றுலா வரும் மக்கள் நிலைதான் பரிதாபம். GPS, மற்றும் வரைபடத்தை வைத்துக்கொண்டு ஆங்காங்கே முழித்துக்கொண்டு நிற்கும் பல பிரயாணிகள் இப்போது சகஜம். இதனால் இந்த தெருவிலிருக்கும் அநேக கடைகளில் வியாபாரம் மந்தமாகிவிட்டது என பெருமூச்சு விடுகிறார்கள்.

2011 முடித்து விடுவோம்னு சொல்லி இப்ப இந்த ட்ராமுக்கான் இருப்பு பாதையை அமைக்கும் நிறுவனம் செலவு அதிகரிக்க கூடும் அப்படீன்னு இதுக்காக எடின்பரோ நகர மன்றத்திடம் மேலும் நிதி கேட்க, அதை மன்றம் ஏற்க மறுத்து இழுபறி நிலையாகி இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என உணர்ந்து எப்படியோ சமரசம் செய்து 2012ல் முடிச்சுடுவோம்னு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பதிவை முடிப்பதற்கு முன் சமீபத்தில் நான் பார்த்த ஸ்காட்லாந் பற்றிய விடியோ, பேக்பைப்பர் இசையுடன் மிக அறுமையாக பதிவு செய்ய பட்டுள்ளது.

நடந்தவை நடப்பவை-11

இந்த மாத துவக்கத்தில் சத்தம் போடாம ஸ்காட்லாண்டின் மேற்கு பக்கம் ஃபிர்த் ஆஃப் க்லைட்-ல் லிட்டில் கம்ப்ரே (Little Cumbrae) என்கிற தீவ சுமார் இருபது லட்சம் பவுண்டுகளுக்கு (£2m), பதஞ்சலி யோக பீடம் என்னும் அறக்கட்டளை நடத்தும் சாம் போத்தார்-சுனிதா போத்தார் தம்பதியினர் வாங்கியுள்ளனர். இந்த தீவை அமைதி (இல்லை சமாதான??) தீவு (Peace Island) என நாமகரணம் செய்து இங்கு யோக குரு ராம் தேவ் அவர்களின் யோகா மையம் செயல் படும் என அறிவித்திருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் பலவாரான செய்திகள் இதை பற்றி. யோகி ராம் தேவ் புற்று நோய் மற்றும் எய்ட்ஸ்க்கான மருந்து விற்பது ஒத்துக்கொள்ள முடியாது, இது ஏமாற்று வேலை என்றெல்லாம் சின்னதாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை செய்திக்கான பின்னூட்டத்தில் ஒரு மண்ணின் மைந்தர் ரொம்ப ஃபீலிங் ஆகி

"I once contemplated buying a small property in India - I was told that as a foreigner I couldn't own anywhere in India. It is sure a sorry day for Bonnie Scotland when one of its islands is allowed to become a spiritual curry restaurant. It would be interesting to see what would happen if the Scottish proposed building anything similar in Rishikesh."

அண்ணா, நீங்க நேரடியா வாங்க முடியாட்டியும் பினாமி பேர்ல வாங்கி உங்க இஷ்டம் போல செய்யலாண்ணா. அது கூட வேண்டாம், நாங்களே ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு இந்தியால இன்னும் மிச்சமிருக்கும் வனப்பிரதேசங்களையும் எதாவது ஒரு யோகா இல்லை ஆன்மீக மையத்துக்காக ஒரு வழி பண்ணீட்டுதான் இருக்கோம்.


வாழ்நாள் சாதனை பட்டம் வாங்க போனவர சோதனையா கைது பண்ணினா எப்படி இருக்கும்??

தெய்வம் நின்று கொல்லும் என்பது போல 31 வருஷம் முன்னாடி 13 வயது சிறுமியுடன் உறவு வெச்சுகிட்ட தப்புக்காக அமெரிக்க போலீஸ் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனரான ரோமன் போலன்ஸ்கியை ஸ்விஸ்ல் வைத்து கைது செய்ததுள்ளது. போலன்ஸ்கியின் சைனா டவுன் படத்தின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற வசனம் வரும் " Forget it, Jake, Its Chinatown" என்று, இப்படி அமெரிக்க போலிசும், "Foget it, Polanski, it is Swiss" போனா போகுதுன்னு விட்டுருவாங்கன்னு நினச்சுட்டாரு போலருக்கு.

நடந்தவை நடப்பவை-10

சென்ற வாரம் ஒரு இந்திய நண்பரை சந்தித்தேன். அவர் எடின்பரோ வந்து ஆறு மாதஙகளுக்கு மேல் ஆகிறதாகவும், மனைவிக்கு பர்மிங்ஹாமில் வேலை கிடைத்திருப்பதால் அங்கு அவர்களுக்கு தனியாக வீடு பார்த்து குடி வைக்க வேண்டும் என்று அங்கு சென்று பார்த்து வந்ததாக கூறினார். அவர் மேலும் சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பர்மிங்ஹாமின் சில புறநகர் பகுதிகளில் வீடு பார்த்ததாகவும் அதில் இந்தியர்கள் வாழும் சில தெருக்கள் மிகவும் குப்பை கூளமாகவும் மற்ற இடங்கள் போல, அதாவது ஐரோப்பியர்கள் வாழும் இடங்களைப் போல ஓரளவாவது சுத்தமாக இல்லை என கூறினார். இந்த மாதிரி இந்தியர்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் வசிக்க தனக்கு விருப்பமில்லை என்றார். அட மக்கா நம்ம பய புள்ளக இப்படி மாறிப் போய்ட்டாய்ங்களேன்னு வருத்த படரதா இல்ல பெரும படரதா?

கூகுள் அஞ்சல் வேல செய்யலேன்னா என்ன ஆகும்?

அப்படி ஒரு முப்பது நிமிஷத்துக்கு கூகுள் வல்லுனர்கள் வழக்கமான கூகுள் செர்வர் (வழங்கி??) மேம்பாட்டுக்காக நிறுத்தியபோது மில்லியன் மக்களின் தங்கல் கூகுள் அஞ்சலை பார்க்க முடியாமல் போக உடனே இப்படி டிவிட்டர் மற்றும் இன்ன பிற வற்றில் எழுதியது இப்படி :


'Omg thank God I was at work!!! I wouldve gone mad,'

'Minute 30 of Gmail outage. The cities are in flames and people eating pets to survive,

கூகுள் பிறகு இதற்கு மன்னிப்பு கேட்டாலும் எனக்கென்னவோ இவிங்க வேணும்னே செர்வர அணைச்சிட்டு என்ன ஆகுது நம்ம அஞ்சல எவ்வளவு பேர் உபயோகப்படுத்துறாங்க, எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துன்னு ஒரு நோட்டம் விட்டுருப்பாங்கன்னே தோணுது.

கேட்டதை தேடிக்கொடுக்கும் கூகுள் ஆண்டவர் (மறுபடி கூகுளா??) காப்பத்தட்டும்.


மற்றொரு செய்தி, சென்ற வருடம் நான் சென்று வந்த Isle of Skyeல் கடந்த 49 நாட்க்களாக விடாமல் மழை பெய்து வருவதாகிறது. கோளவெப்ப உயர்வால் இப்படி ஆங்காங்கே பருவநிலை பாதிக்கப்பட்டு வருகிறது. உடனடியா நடவடிக்க எடுக்கலேன்னா 2100ல் ஒரு மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்து விடும் அபாயமிருக்கிறது. இதனால் கடலோரமுள்ள மும்பாய், நியுயார்க், லண்டன், சாங்காய் போன்ற பல நகரங்கள் பாதிக்கப்படும்.

யுக்கேயில் இதற்காக 2010த்துக்குள் 10% கார்பன் வெளியீட்டளவை (emission) குறைப்பதற்காக 10:10 என்ற ஒரு திட்ட-இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தியா மற்றும் சீனாவில், நடந்து பஸ் ஏறி போனவங்க எல்லாம் இரண்டு சக்கரத்துக்கும், இரண்டு சக்கரம் வெச்சிருந்தவங்க நாலு சக்கரத்துக்கும், நாலு வெச்சிருந்தவங்க இன்னும் இரண்டு நாலு சக்கரம்னு மாறிக்கிட்டு இருக்காங்க. நாங்க இப்பதான் சும்மா ஜெட் வேகத்துல வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டு இருக்கோம், இப்ப வந்து ”அண்ணா கொஞ்சம் புகைய கொரச்சிக்கப்பிடாதான்னா என்னா அர்த்தம்??” ன்னு அபிப்ராயப்படறாங்க. நியாந்தானே?

நடந்தவை நடப்பவை-9

இந்த வருடம் விம்பில்டனில் உள்ளூர் ஆண்டியை வெளியூர் ஆண்டி தோற்கடித்ததில் பிரித்தானிய மாக்களுக்கு சற்று வருத்தம். ஸ்காட்லாந்துகாரரானாலும் சரி யுகே பிராந்தியவாசி என போனால் போகட்டும் 1936ல் ஜெயித்த ஃப்ரெட் பெர்ரிக்கு பிறகு ஆண்டி மர்ரியாவது ஜெயிப்பார் என எதிரிபார்த்தார்கள். அது நடக்கவில்லை.

பல்வலி என பல் மருத்துவரிடம் போனதில் வேர்கால்வாய் பழுதுபட்டிருப்பதால் ஐந்து நாட்களுக்கு ஆமாக்ஸிலின் சாப்பிட்டுவிட்டு வா அதை சரி செய்யலாம் என கூறினார். புல்லட் மாதிரி இருக்கும் அந்த மாத்திரையை சாப்பிடும் போது என் பெரியம்மா ஞாபகம் வந்தது. தினமும் காலை ஒரு மூடி நிறைய மாத்திரைகள், ரத்த அழுத்தத்துக்கு ஒன்று, கொழுப்பை குறைக எதாவது ஒரு ஸ்டாடின், இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் இருக்க ஆஸ்பிரின், ஃபோலிக் ஆஸிடுக்கு ஒன்று, மேலும் இதனுடன் ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த ஒன்று என ஒன்றன் பின் ஒன்றாக காலை ப்ரேக் ஃபாஸ்ட் போல சாப்பிடுவார். இது சிலருக்கு அவரவர் உடல நிலை பொருத்து மூன்று வேளையும் சாப்பிடும் நிலை இருக்கலாம். என்ன கொடும சார்? இப்படி பல மாத்திரைக்கு பதிலாக இவை எல்லாவற்றயும் கலந்து ஒரு கலவையாக செய்தால் என யோசித்து 2002ல் Polypill என ஒரு யோசனைய முன் வைத்து செய்த ஆராய்ச்சி பலன் தருவதாக இருக்கிறது.

இந்த பல்குளிகையில், ரத்த அழுத்தம், குழாய் அடைப்பு, கொழுப்பை குறைக்க, என எல்லாவற்றையும் ஒரே மாத்திரையில் கலந்து கொடுப்பதால் தனித்தனியே சாப்பிடும் தொந்திரவு இல்லை. இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான சோதனைகளை நடத்தியுள்ளார்கள். சமீத்ததில் இதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த வகை மாத்திரகைள் இப்போது இந்தியாவில் பொதுவில் அனுமத்தித்து இருக்கிறர்ர்கள். விரைவில் உலகளவில் எல்லோருக்கும் கிடைக்கக் கூடும். ஆனால் பாவம் மிக நொந்து கொண்டே பல மாத்திரைகள் சாப்பிட்ட என் பெரியம்மா இந்த வசதியை பெற முடியாமலே போய் சேர்ந்துவிட்டார். Pollypill பல மாத்திரைகளை விழுங்கவேண்டிய துர்பாக்கிய நிலையிலிருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.


ஆண்கள் இல்லா உலகம்

மற்றுமொரு சமீபத்திய மருத்துவ கண்டுபிடிப்பு, நியுகாஸில் பலகலை கழக நயர்னியா (Nayernia) மற்றும் North East England Stem Cell Institute (Nesci)ம் இணைந்து சோதனைசாலையில் மனித விந்தணுவை தயாரித்து காட்டியுள்ளார்கள். இதனால் பல நன்மைகள் என இதனை கண்டுபிடித்தவர்கள் பட்டியலிட்டாலும், இது சரியில்லை என அதற்குள்ளாக பல எதிர்ப்புகள் குவிந்துள்ளது.

இதன் தொடர்பாக உலக அளவில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக ஒரு தகவல் எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி செயற்கையாக தயாரித்த விந்தணு மூலம் செயற்கையாக ஒரு பெண் கருத்தரிக்க இயலும். பின்பு ஆண் என்பது தேவையில்லாது போகும். இப்படியே தொடர்ந்தால், ஆண்களே இல்லத உலகமாக மாறும் வாய்பிருக்கிறது.

இந்த வியுகத்திற்கு ஆதரவாக ஆறு வருடங்களுக்கு முன்பு வந்த ப்ரெய்ன் சைக்ஸ் (Bryan Sykes) என்பவர் எழுதிய Adam's Curse என்கிற புத்தகத்தில் ஆண்கள் இல்லாத உலகம் என்கிற ஒரு கோட்பாடை முன் வைத்து எழுதியிருக்கிறார். மனித செல்லில் 23 ஜோடி க்ரோமொசோம்கள் உள்ளது. இதில் 22 ஜோடிகள ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியானவை. இந்த 23வது ஜோடியில்தான் ஆணுக்கு XY க்ரோமொசோம் பெண்ணுக்கு XX க்ரோமொசோம். இந்த Y க்ரோமொசோம் என்பதுதான் ஆணின் விந்தனு உற்பத்தி செய்யும் தன்மையை கொடுக்கிறது.

ஒவ்வொரு முறையும் செல் பிரியும் போது இந்த க்ரோமொசோமில் எதாவது கோகளாறு எற்பட்டால் சரி ஜோடி க்ரோமொசோம்களில் இந்த கோளாறு சரிசெய்ய பட்டுவிடும். ஆனால் இந்த் XY ஜோடியில் Y க்ரோமொசோமில் ஏற்படும் கோளாறுகள் சரிசெய்ய ஜோடியில்லாது போவதால் கோளாறுகள் தொடரும். ஒவ்வொரு தலைமுறை ஆண்களுக்கு இந்த Y க்ரோமொசோம் மரபணு மாறுந்தன்மையால் 10 சதவிகிதம் இனபெருக்கம் செய்ய இயலாது போகும். இப்படியே தொடர்ந்து 125000 வருடங்களுக்கு பின்பு இந்த Y க்ரோமொசோம் முற்றிலுமாக செயலிழந்து அல்லது அழிந்தே போகக கூடும் என்று கூறுகிறார். ஆனால் பெண் இனம் single sex reproduction or Asexual முறைப்படி கருத்தரிக்க இயலும். ஆக ஆண்கள் இல்லாத உலகம் இன்னும் 125000 வருடத்தில் சாத்தியமே. அந்த உலகம் எப்படி இருக்கும்? அவரவர் கற்பனைக்கு...

நடந்தவை நடப்பவை-8

நம்ம ஊர்ல குழந்தைகள் திருமணம் (child marriage) மிக சகஜம் (இப்போது மிகக்குறைவு) ஆனாலும் அவர்கள் 13 வயதில் பிள்ள பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் யூக்கேயில் இந்த வாரம் மிகுந்த சர்ச்சையை கிளப்பிய விஷயம் 13 வயதில் Alfie Patten அப்பாவனது. சரி, இவனது குழந்தைக்கு தாய் யாரென்று பார்த்தால் Chantelle Steadman வயது 15!!. ஊடகங்களுக்கு கொண்டாட்டம், , புகைப்படம் , மற்றும்:

அப்பாவனது பற்றி எப்படி உணர்கிறாய்?
எப்படி வளர்க்கப்போகிறாய்?
செலவுக்கு என்ன பண்ணுவாய்? என்கிர ரீதியில் பேட்டி.

இப்போது யார் குழந்தைக்கு தந்தை என்பதில் போட்டி வந்து விட்டது. இது ஏன் என்றால் Chantelle மேலும் இரண்டு பேரோடு உறவு வைத்திருந்ததாக சொல்லுகிறார்கள். அரசியல்வாதிகள் வழக்கம் போல் சமூகம் மிகவும் கெட்டுப்போய்விட்டது இதற்கு காரணம் எதிர்கட்சியின் சில கொள்கைகளே என்கிற ரீதியில் சவுண்டு விட்டாலும், இவர்களுக்கு ஆதரவாக கத்தோலிக்க பாதிரியார் சீமஸ் ஹெஸ்டர் குரல் கொடுத்திருக்கிறார், இவர்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும்(!!) இருந்துவிட்டு போகட்டும், இந்த குழந்தையை கருச்சிதைவு செய்யாமல், மனித உயிரின் பேரில் இவர்கள் கொண்டுள்ள மரியாதை போற்றத்தக்கது, என்று.

ஆஹா வாழ்க மனித நேயம்!!

நடந்தவை நடப்பவை-7

சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் மூலம் இந்தியாவில் மனித உரிமை அல்லது தனி மனித சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

ஒன்று மங்களூர் pubபில் (தமிழ்ல்??) பெண்களை அடித்து ஒட ஒட துரத்தியது. பார் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா என்ற கேள்வி மேலோட்டமாக இருந்தாலும் அதன் பின் உள்ள ஆணாதிக்க சமூக நிலைபாடு எல்லோருக்கும் (பெண்களுக்கும் கூட) பொதுவாகவே உள்ளது. pubபுக்கு போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடனே பார்க்கும் மனோபாவம் மிக இயல்பான ஒன்று. கலாசாரம் மாறுவதை யாரால தடுக்க இயலும்? காலம் மாறினால் கலாச்சாரமும் மாறும். சட்டங்களும், நம்பிக்கைகளுமே கூட மாறித்தான் போகும். ஆனாலும் ராம சேனைகள் மாறுதலை தாங்க முடியாது சிறு குழந்தைகள் போல செய்யும் அடாவடிகள் (tantrums) இவர்களும் (மன) வளர்ச்சியுற்று தவிர்க்கவே முடியாத மாறுதலுக்கு உட்பட்டாலே ஒழிய இந்த மாதிரி கிளர்ச்சிகள் நடந்துகொண்டுதானிருக்கும் போலிருக்கிறது.

இப்போது வர இருக்கும் வெலண்டைன்ஸ் தினத்தையும் எதிர்த்து இந்த ராம சேனா கிளர்ச்சி செய்ய இருப்பதால் இவர்களை எதிர்த்து வலையில், facebookல் ஒரு 5000 உறுப்பினர்கள் (ஆண்கள் உட்பட) தங்களது கண்டனத்தை, இந்த ராம சேனைக்கு இளஞ்சிவப்பு உள்ளாடை அனுப்புவதன் மூலம் தெரியபடுத்தி இருக்கிறார்கள்.




இனி மற்றொன்று மும்பையில் நடந்த தீவிர வாத தாக்குதலின் போது NDTV இதனை ஒளிபரப்பிய விதத்தை விமர்சித்து தனது வலைத்தளத்தில் எழுதியதை கண்டித்து அந்த வலைப்பதிவாளருக்கு அவர் எழுதியதை நீக்குவதல்லாமல் மன்னிப்பும் கோர வேண்டும் என்றுநீதிமன்ற எச்சரிக்கை அனுப்பியது. அதன் பின் வேறு வழியின்றி அவர் அதை நீக்கி தன் வலைத்தளத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ஆக உங்களுக்கு பேச்சுரிமை மீது நம்பிக்கையிருந்தால் NDTVயின் நடவடிக்கையை எதிர்த்து உங்கள் வலையில் ஒரு சிறு எதிர்ப்பை தெரிவிக்கவும்.

Shame on NDTV, Ms Burkha Dutt, and Mr. Prannoy Roy


பிகு:
NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain Supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of the Communist party of India . His wife and Brinda Karat are sisters.

நடந்தவை நடப்பவை-6

நீச்சல் வகுப்பு இருப்பதால் சனிக்கிழமை காலை கஷ்டப்பட்டு எழுந்து ப்ரின்ஸஸ் தெருவில் பஸ் பிடிக்க செல்லும்போது விஸ்கி வாசம் காற்றில் மிதந்து வந்தது. வெள்ளி இரவு இந்த ஊர் மக்கள் ஏதோ திங்கள் கிழமை இருக்கிற எல்லா சரக்கையும் கடலில் கொட்டிவிடப்படும் என அரசாங்க ஆணை வந்தது போல் குடித்து தீர்த்து விடுவார்கள். அந்த போதையில் யாராவது பாட்டிலை ரோட்டில் கவிழ்த்து விட்டிருப்பான்(ள்) என நினைத்தால் வீட்டைவிட்டு வந்து வின்சென்ட் தெரு, ஹோவ் தெரு தாண்டி ஃப்ரெட்ரிக் தெருவந்து ப்ரின்ஸஸ் வரும் வரை எங்கும் அதே வாசம். எடின்பரோவில் வைக்கோல் சந்தை அருகே இருக்கும் காலடோனியன் வடிசாலை (distillery) ஞாபகம் வந்தது. நேத்து ராத்திரி ஊத்திக்கிட்ட சரக்கு ஞாபகமா இருக்க காலையில் காற்றில் மிதந்து வரும் விஸ்கி வாசம் இந்த ஊர் "குடி"மக்களுக்காகவே.

நீச்சல் குளம் இருக்குமிடம் தெரியாமல், ஒரு சின்ன போர்டு போட்டு இருந்தது. உள்ளே போனால் இரண்டு பாட்மிட்டன் கோர்ட் சைஸ்க்கு குளம் மிகவும் சுத்தமாக இருந்தது. போன இரண்டு வாரங்களாக வந்த ஆசான் லீவுல போனதால இந்த வாரம் மேரி என்ற புது டீச்சர். இரண்டொரு நிமிடங்களிலேயே இவர் குழந்தைகளுக்கான ஆசிரியை என தெரிந்து போனது:

நீ எங்க தங்கியிருக்கே?

எப்படி வந்தாய் பஸ்ஸுலயா? காருலயா?

இன்னிக்கி நல்ல மழ இல்லியா?


என இப்படி சம்பாஷனை போய்கொண்டிருந்தது, இறுதியில் இதெற்கெல்லாம் மகுடமாக வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருந்த போது "சரி இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு உங்களுக்கு என்ன பன்ணனும்னு தோனுதோ அத பண்ணுங்க!!!" (do whatever you like) என்றாளே பார்க்கலாம். என் பையனை நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகளுக்கு வகுப்பு முடிவில் ஒரு ஐந்து நிமிடம் இப்படி சொல்லி விட்டுவிடுவார்கள் அது ஞாபகத்துக்கு வர என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

எனினும, எதையும் படிக்கனும் என வகுப்புக்கு வந்து விட்டால் வாத்தியாருக்கு நாம் எவ்வளவு வயதான போதும் குழந்தைகள் போல்தானோ என தோன்றியது.

மாலை மிக அருமையான வெய்யிலடித்ததால் வீட்டுக்கு அருகே இருக்கும் பொட்டானிக்கல் கார்டனை கண்டுபிடிக்கலாம் என நடக்க தொடங்கினேன். சில தூரம் வந்த பின் புகைபடக்கருவியை எடுத்து வந்திருக்கலாம் என்ற ஞானோதயம் கூடவே சோம்பேறித்தனமும் வந்ததால் சரி அடுத்த முறை பார்க்கலாம் என கார்டனுக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்த நேரம் மாலை 4.30 மணி. உள்ளே இருக்கும் கண்ணாடிவீட்டுக்கு வார இறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி இலவசம் என கேட்டுக்கு அருகே இருக்கும் போர்டு சொல்லியது. அஹா 3.50 பவுண்டு மிச்சம் என குதூகலமாக நடக்க தொடங்கினே.

உலகின் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள், செடிகள். எல்லாவற்றுக்கும் அதன் பெயர் எந்த நாட்டை சேர்ந்தது என்ற குறிப்புகளுடன் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.

காமிரா எடுத்து வரவில்லையென்றால் என்ன அதான் செல் காமிரா இருக்கிறதே என சில வற்றை க்ளிக்கினேன்.





இங்கு எடின்பரோவில் எங்கு பார்த்தாலும் பூத்திருக்கும் டஃபோடில்(daffodil), கான்சர் சொசைட்டியின் சின்னம்.



நடந்து நடந்து கண்ணாடிவீட்டுக்கு வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜி "சஹானா பாடல் செட் மாதிரி". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.



வெப்ப மண்டல பகுதியில் ஒரு மூலையில் ஷோகேஸ் மாதிரி வைத்து இந்த மண்டலத்தில் விளையும் சில முக்கியமான் பொருட்களை வைத்திருந்தார்கள். வெல்லம், சோளம், கோதுமை, வாழை, மாம்பழம், எள்ளு.. என அப்படியே பார்த்தால் ஒரு அரிசி மூட்டை அதன் மேலே என்னவென்று பார்த்தால் நம்ம ஊரு MTR இன்ஸ்டன்ட் இட்லி மாவு பாக்கெட!! அட பரவாயில்லையே என் தோன்றியது.

மன்னிக்கவும் சற்று உள்ளடங்கியிருந்ததால் ஃபோகஸ் ஆகவில்லை.

எல்லாம் முடிந்து வெளியே வரும் நூழை வாயில் கேட்டுக்கு அருகே வந்த போது ஐந்தும் மூன்று வயதுமான் மகளையும் மகனையும் ப்டித்துக்கொண்டு ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். அப்போது நான் கேட்ட சம்பாஷனை:

மகள்: "அவ்வளவுதானா டாடி?"

அப்பா: "ம் ஆச்சு. இப்போ சமத்தா இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தா காருக்கு போயி அப்புறம் வீட்டுக்கு போகலாம்."

மகள்: "ம் சரி. அந்த அணில் எவ்வளவு நல்லா இருந்தது? க்ளாஸ்ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மவோட இன்னொருதரம் வரலாமா?"

அப்பா: "ம் வரலாம். சரி இப்போ போகரதுக்கு முன்னாடி ஒரு வேல பாக்கியிருக்கு. இன்னிக்கு நம்மள ஃப்ரீயா உள்ள விட்டாங்க இல்லியா, ஆனா எவ்வளவு செலவு செஞ்சு நல்லா வெச்சிருக்காங்க அத பாராட்றா மாதிரி நீங்க இப்ப இந்த காச அங்க வெச்சிருக்கிற டொனேஷன் உண்டியல்ல போட்டுட்டு வாங்க", என கூறி இருவருக்கும் சில்லறைகளை கொடுத்து அவர்களும் போட்டு விட்ட வந்தனர்.

இன்று அனுமதி இலவசம் என்று எனக்கு பட்டது சிற்றின்பமாக தோன்றியது.

மேல் நாட்டவரிடம் குழந்தைகளை வளர்க்கும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

நடந்தவை நடப்பவை-5

தொலைபேசி வர்த்தக நாகரீகம்


கிட்டதட்ட ஒரு மாதமாக "க்ளோபல் டெலிலின்க்" என்கிற ஒரு குறைந்த செலவில் அயல் நாட்டு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திலிருந்து அவர்களது சேவையில் சேருமாரு தொலைபேசி மூலம்,சரியாக வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சேரும் 6 மணிக்கு அழைப்பு வரும். இதுவரை 5 முறை ஃபோன் வந்தாயிற்று. இந்த சம்பாஷனை இப்படி போகும்: (ஆங்கிலத்தில்தான் ஆனால் இங்கு தமிழாக்கம்)


மணி அடித்து ஃபோனை எடுத்து ஹலோ என்றவுடன்,

" ஹலோ நீங்க யாரு பேசரது?

(அடிப்படை தொலைபேசி நாகரீகமில்லாத கடுப்பேற்றும் ஒரு கேள்வி)

"நீங்கதான் ஃபோன் பண்ணுனீங்க யாரு நீங்க? உங்களுக்கு யாரு வேணும்?"
(இது என் மனைவி)

"------ இருக்காரா ஃபோன அவர்ட குடுங்க"
(ப்ளீஸ் போன்ற பண்பு எல்லாம் இல்லாமல் ஒரு அதிகார தோரணை)

"ஹலோ ----- பேசரேன் "

"ஹலோ நான் க்ளோபல் டெலிலின்க் பெங்களூருலிருந்து பல்லவி பேசறேன்......
ப்ளா ப்ளா ப்ளா....எங்க சேவை உங்களுக்கு மிக அவசியம் (அட எனக்கு தெரியாம போச்சே) உங்க க்ரெடிட் கார்டு டீடெயில் குடுங்க..."

எடுத்த எடுப்பிலேயே ஒரு இரண்டு நிமிடங்கள் எதிரிலிருப்பவரை பேச விடாது கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்து கடைசியில் க்ரெடி கார்டு நம்பரை கேட்கிறார்கள். மிகவும் மெனக்கெட்டு பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

"எனக்கு இப்போது உங்கள் சேவை தேவையில்லை மன்னிக்கவும்"

"ஹலோ சார் (இப்போதுதான் பணிவு வருகிறது) நீங்க சைன் பண்ணினா போதும் உடனடியா ஒண்ணும் பே பண்ண வேண்டாம்?

"மன்னிக்கவும் நான் வேண்டாம் என்கிறேன்"

"சார் ஒரு பத்து டாலருக்காவது எடுங்க ப்ளீஸ் (முதல் முறையாக இப்போதுதான் இந்த வார்த்தை வருகிறது) ...

"இல்லை நன்றி வேண்டாம்"

எதிர் முனை "டொக்" தொடர்பை துண்டித்துவிட்டாள். நான் செய்திருக்க வேண்டியது. எனக்கு தேவைதான்.



ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு மாலை,

"ஹலோ நாங்க க்ளோபல் டெலி..." என்றவுடனேயே நான்

"ஹலோ ப்ளீஸ் கொஞ்சம் என்னை பேச விடுங்க. ஏற்கனவே சில நாள் முன்னாடி ஒருத்தங்க ஃபோன் பண்ணினாங்க, நான் வேண்டாம் என்று சொன்னேன்".

"சரி இப்ப என்ன சொல்றீங்க, நீங்க இந்த சேவைல சேருங்களேன்?"

"ஆளவுடுங்கோ, வேண்டாம்"

எதிமுனை :"டொக்"


இந்த மாதிரி மீண்டும் இரண்டு முறை மேலும் ஃபோன் வந்தது. எனககு இது ஒரு மாதிரி ஸ்டாக்கிங்கோ (stalking) என்று தோன்றியது.


ஆனால் நேற்று மீண்டும் வந்தது ஒரு உச்சம் (நீண்ட நாள் பதிவு போட நேரமில்லது போனாலும் பதிவு போட்டே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு):

"ஹலோ நாங்க க்ளொபல்...ப்ளா ப்ளா"

நான் மிக கடுப்புடன் "ஹலோ கொஞ்சம் என்ன பேச விடுங்க. ஏகப்பட்ட ஃபோன் உங்க கம்பனியிலேர்ந்து "......

"நா ஒரு பத்து நிமிஷம் இல்லேன்னா ஒரு அரை மணி நேரம் கழித்து ஃபோன் பண்ணவா"

மிக மிக கடுப்பாகி "Dont try to snap me when I am trying to talk..."
நான் பேச வந்ததை பேசி முடிக்க வில்லை தொடர்பை துண்டித்துவிட்டாள்.

எனக்கென்னவோ தொடர்பை துண்டித்த பின் அந்த பெங்களுரு கால் சென்டரில் பல்லவி, ரீனா, ரித்திகா எல்லோரும் கூடியிருக்க " யாரு அந்த வெலிங்டன் சாவு கிராக்கி -----தானே? கிறுக்கன் 14 சென்டுல இந்தியாவுக்கு ஃபோன் பேசலாம் என்றால் வேண்டாம் என்குது லூசு பேக்கு" என்று ஸ்வேதா கடுப்பாகி கூறியிருக்கலாம் என்றே தோன்றுகிரது.

மும்பையில் ஒரு முறை வேலைக்கு ஆள் எடுக்கும் முகாம், அதாவது ஒரு மேளா மாதிரி, நடந்தது. அதற்கான தகுதி என்வென்றால், எட்டாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் ஆனால் பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் தேறியிருக்கக் கூடாது. இது கால் செண்டர் வேலைக்கான் தேர்வு. இந்த மாதிரி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இப்படி பயிற்சி அளித்தால் என்னவாகும்? நான் உங்கள் சேவை வேண்டாம் என்று சொல்வதையே இவர்களால் சகிக்க முடியவில்லை. ஒரு வேளை இந்த சேவையில் சேர்ந்து ஏதாவது பிரச்சனை என்றால் இவர்களது உதவி எப்படி இருக்கும் என்பது அவரவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இதை இன்னுமொருவிதமாககூட பார்கலாம், என்னதான் இருந்தாலும் இவன் இந்தியந்தானே எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று கூட இருக்கலாம் ஒரு வகையான self loathing மாதிரி நம்ம இனம்தானே?

ஆக நியுஸி மக்கள் யாருக்காவது இப்படி ஃபோன் வந்தால் தொடர்பு துண்ட்டிப்பு பொத்தானுக்கு அருகே ஒரு விரலை வைத்துக்கொண்டு பேசுவது நல்லது. யார் முதலில் துண்டிக்கிறார்கள் பார்ப்போம் என்று கிட்டத்தட்ட ஒரு கேம் மாதிரி.

நடந்தவை நடப்பவை-4

மீண்டும் ஒரு பனிக்கால தொடக்க கர்நாடக கச்சேரி இந்த மாதம் 16 தேதி விக்டோரியா அடெம்ஸ் ஹாலில் நடந்தது. பாம்பே ஜெயஸ்ரீ மறுபடி தன் மாய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார். எளிமை என்பதற்கு ஒரு இலக்கணம் போல் இருந்தது அன்று. என்னடா வென்று பார்த்தால், மெல்போர்ன்லிருந்த வந்த விமானத்தில் அவரது பெட்டி வரவில்லை. நல்லவேளை தம்பூரா கையோடு கொண்டுவந்ததால் கச்சேரி நடந்தது. அதனாலென்ன அணிந்து வந்த ஜீன்ஸ் டாப்ஸ்சிலேயே பாடுகிறேன் என்று தயாராகிவிட்டார். (எவ்வளவு வித்யாசமாக இருந்திருக்கும். மேடைக் கச்சேரிக்கு ஒரு புது திருப்பமாக இருந்திருக்கும். இருந்தாலும் அவர் ஜீன்ஸ் போட்டிருந்தால் "வசீகராவோ" இல்லை, "ஒன்றா ரெண்டாவோ" கேட்கத்தோன்றியிருக்கும்). பின்பு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புடவை இத்யாதிகளை இங்கிருப்பவர்களிடமிருந்து இரவல் வாங்கி கொடுத்து, அதை அணிந்து வந்து, அந்த பாதிப்பு எதுவும் தன்னுடைய பாடும் திறனில் குறுக்கிடாமல் பாட்டியது மிக பாராட்டவேண்டியது. இதுவே ஒரு பாப், ராக் இசை பாடகருக்கு ஆகியிருந்தால் அதை ஒரு பெரிய நியுஸாக்கி அந்த ஏர்லைன்ஸை ஒரு வழி பண்ணியிருப்பார்கள். நிகழ்ச்சியும் நடந்திருக்காது. இந்த களேபரத்தில் நிகழ்ச்சி அரை மணி தாமதமாக ஆரம்பித்து, அதனால் ராகம் தாளம் பல்லவி இல்லாமலே கச்சேரி முடிந்தது காசு கொடுத்து கேட்க்க வந்த ரசிகர்களுக்கு இது சற்றே குறை. இது நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சொதப்பலே. சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி நடந்த அரங்கத்தின் அனுமதியை விமான தாமதமான போதே சிந்தித்து நீட்டியிருக்க வேண்டும். எனினும் ஒரு பாடமே. வெளிநாட்டில் கச்சேரி அமைப்பாளர்கள் கவனிக்கவேண்டியது.
வழக்கமாக ஆரம்பிக்கும் ஹம்சத்வனியில் வாரணா முகவா என்ற கோடீச்வர ஐயர் பாடலில் தொடங்கி, பிறகு அகிலாண்டேஸ்வரி (த்விஜயந்தி), பஜ ரே(பூர்ணசந்திகா), பார்வதி நயகனே(ஷண்முகப்ரியா,பா.சிவன்), புவனேஸ்வரியா(மோகனகல்யாணி, மு.பாகவதர்), சபாபதிக்கு(ஆபோகி, கோ.பா), கிருஷ்ணா நீ(யமுனாகல்யாணி, விசராயர்?), கண்டேன் கண்டேன் சீதையை(வசந்தா?, அ.கவி) கோபால கோகுல (மால்கவுன்ஸ், துளசி தாஸ்), ராகி தந்திரா(மதுவந்தி, பு.தா), சந்திரசேகரா ஈஷா (சிந்துபைரவி, செ.வை.பா), கோபால கோவிந்த ராதா(பஜன்??), குரை ஒன்றும்(சிவரஞ்சனி/காபி/சி.பை, ராஜாஜி) பாடி கடைசியில் ஒரு தில்லானா பாடி நிறைவு செய்தார். மிருதங்கத்தில் வைத்தியநாதனும் (டி.கே.ஜெயராமன் மகன்), வயலினில் H.N.பாஸ்கரும் மிக அருமையான பக்கவாத்யமாக அமைந்தது சிறப்பு.

அன்று ஜெயஸ்ரீ கொண்டுவந்த அனைத்து சிடிக்களும் விற்று தீர்த்தது ஒரு பெரிய மைல்கல். (நன்றி ஹாரிஸ்ஜெயராஜ்).

நேற்று வெ.த.ச ஜூன் மாத கலைநிகழ்ச்சி நடந்தது. அதில் ஆசிரியர் தா.ஆறுமுகத்தின் ஆரய்ச்சித் தொகுப்பான "நிஸிலாந்தில் தமிழன் பதித்த கால்சுவடு" என்ற நூல் வெளியீடு ஒரு சிறப்பம்சம். இந்நூலைப் பற்றி தனிப்பதிவு போடவேண்டும். இதில் தமிழ்மணி மற்றும் இன்னபிற சரித்திர தடயங்களை தேடிப்பிடித்து பதிவு செய்திருக்கிறார். அவர் வயதுக்கு (82) மிகபாரட்டத்தக்க ஒரு சாதனை. பின்பு எங்களது வெலிங்டன் தமிழ் டாக்கீஸின் பல்சுவை நிகழ்ச்சி ஒரு வழியாக நடந்தேறியது. மக்களை சிரிக்க வைப்பது மிகக்கடினம். எதுக்கு சிரிப்பாய்ங்கன்னே புரியமாட்டேங்குது. இங்குள்ள தமிழ் சங்கம் தாமரை இலை தண்ணீர் போல நடப்பது ஒரு வேதனை. ஏதோ இவர்களிடமிருந்து வசூலித்து, அவர்கள் நேரடியாக தோட்டாக்களும், ஏவுகணைகளும் வாங்க அனுப்பிவிடுகிறார்களோ என்ற மாயையினால், அடுத்த தலைமுறையின் ஆட்டத்தையும் பாட்டத்தையும் பார்த்து, அவர்களை கைதட்டி ஊக்கமளிக்க வரமறுக்கிறார்கள். ஒரு ஜனதா ஹோட்டல் போல் முதலுக்கும் வரவுக்கும் சரியாகிப்போகுமளவுக்கு பலஹீனமான சங்கம் என்பதை யாராவது ஆதாரபுர்வமாக, தெளிவாக விளக்கினால் ஒருவேளை அங்கத்தினர் அளவு கூட வாய்ப்பிருக்கிறது. சொ.செ.சூ போல இங்கு ஒன்றை சொல்லிவிடுவது உத்தமம். நானே இன்னும் தமிழ் சங்கத்தில் மெம்பராகவில்லை!!.

நடந்தவை நடப்பவை-3

எத்தனை காலம் ஆகும் மனிதனை மனிதன் மதிகக...

சென்ற வார இறுதியில் நானும் என் மனைவியும் வழக்கம் போல மாலை நடை அதாவது வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு வீட்டின் முன்னால் சுமார் பத்து பன்னிரெண்டு இளம் வாலிபர்கள் (வய்து 18-20 இருக்கும்) கோடையை கும்மாளமாக கொண்டாடிக்கொண்டிருந்தனர். அனைவரும் பக்கீயா என இங்கு குறிப்பிடப்படும் ஐரோப்பியர்கள். கைகளில் கோப்பைகள், புட்டிகள். நாங்கள் அந்த வீட்டை கடந்து போகையில் சில கூக்குரல்கல் தனிப்பட்டு கேட்டது அது எங்களை நோக்கி என்பது புரிந்தது. நாங்கள் அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது கடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பின்னே,கால்களின் மிக அருகே, ஒரு பாட்டில் உடைந்து சிதறியது. நான் நின்று திரும்பிப் பார்த்தேன். அதை எரிந்தவனிடம் ஒரே மந்தகாசம், மேலும் சில சங்கேத ஏக்காளிப்புகள். அதில் இருவர் எங்களை போய்விடுமாறு கூறினர். நான் என்னவென்று கேட்டுவிடலாம் என்று போக இருந்தனவை என் மனைவி , 'குடிகாரப் பசங்கள், பேசாமல் வாங்க போகலாம் வம்பு வேண்டாம்' எனறு பிடித்து இழுத்துச் சென்றுவிட்டாள். மனதில் என்னெனவோ எண்ண ஓட்டம்.
இப்படியும் தோண்றியது. நாங்கள் பேசாமல் சென்றபின் அவர்கள் நினைத்திருப்பார்கள் "இவன் ரொம்ப நல்லவன்டா. என்ன செஞ்சாலும் தாங்கிக்கிரான்".

இதை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு மாஸ் ஹிஸ்டீரியா என்றா, இல்லை இளவயதில் (adolescent) ஏற்படும் ஒரு அகந்தையினாலா, இல்லை இன வேறு பாட்டினாலா? முதல் இரண்டும் இருக்கலாம் அது சாதாரணம். ஆனால் எங்களுக்கு நடந்தது மூறாவதுதான் என எனக்கு தோன்றியது ஏன் என்றால், நாங்கள் போன திசைக்கு எதிர் திசையில் இரண்டு பக்கீயாக்கள் அதே கூட்டத்தை கடந்து வந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆக எங்களைக் கண்டதும் வேறு எதையோ கண்டதுபோல குஷியாகிவிட்டது கூட்டம். நான் அவர்களிடம் கேட்க்க நினத்தது,

"எங்களைப் பார்த்தால் நாய் மாதிரி உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு இப்போது உங்களை பார்க்கும் போது கரப்பான் பூச்சி மாதிரி தெரிகிரது, ஆனாலும் நாங்கள் உங்கள் மீது மருந்தடிக்கவில்லை, ஒரு நாள் நீங்களும் வளர்ந்து நாயாகும் போது புரிந்துவிடுமென்று" அதற்கும் அவர்களிடமிருந்து ஏதாவது பதில் அல்லது மேலும் ஒரு புட்டி வந்து விழுந்தால் உடைந்த அந்த புட்டியை எடுத்து என்னுடைய நெற்றியில் லேசாக ஒரு கீறு போட்டுக்கொண்டு, 111 அல்லது போலீசுக்கு போன் போட்டு ஒட்டுமொத்தமாக மாட்டிவிடலாம் என்றெல்லாம் பிளான் போட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் மனைவி இழுத்து வந்துவிட்டாள்.

இனி ஃப்ளாஷ்பேக். மதுரை, பழங்காநத்தம் பைபாஸ் பாலத்தின் பக்க சுவர்களில் அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் போகிற வருகிற பெண்களை லந்து பண்ணுவதும் அதை பொற்றுக்காது லுக்விட்டு செல்லும் சில பெரிசுகளை லொள்ளு பண்ணியதும் மனதில ஒளிசொடுக்கியது. நாமும் இதனை கடந்துதான் வந்துள்ளோம். நங்கள் செய்ததற்கும் இங்கு நியுஸியில் நடந்ததற்கும் என்ன பெரிய வித்தாசம்? நிறமும் இனமுமா? இல்லை பருவமா?

அலசிப்பார்த்தால் மனிதன் இயற்கையாக நல்லவனா கெட்டவனா (நாயகன் ஷ்டைலில்) என்ற மதங்கள் மற்றும் தத்துவங்களின் சரித்திரம் வாய்ந்த வாதத்துக்கு வந்து நின்றது. இயற்கை, மனிதனும் உள்பட,கண்காணிப்பில்லை என்றால் நம்பமுடியாது போய்விடும் என்கிறது யூதர்களின் தோரா. இது பற்றி எழுத்தாளர்/பேச்சாளர் தீபக் சோப்ரா இடம் பெற்ற JTN தொலைக்காட்சி தொகுப்பு இங்கு.

அதில் இடம் தீபக் குறிபிட்ட உருது கவிஞர் ரூமியின் கவிதை:

நான் முட்டாள்தனத்தின்
உதடுகளில் வாழ்ந்திருந்தேன்
காரணத்தை அறிய விரும்பி
கதவுகளை தட்டினேன்
கடைசியில் கதவுகள் திறந்தன
நான் உள்ளிருந்தே
தட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்

நடந்தவை நடப்பவை-2

குருவுக்கு தட்சணை கொடுக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். உதாரணத்துக்கு ஏகலைவன். சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு குருதட்சணை குடுக்கவில்லை என்றால் அவர் சொல்லிக்கொடுத்தது உதவாது என்பதும் ஒரு வகை நம்பிக்கை. இது ஒரு சர்வீஸ் ஃபி மாதிரி என்றாலும் குருவுக்கு உரிய தானம் என அதை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கிறோம். காலப்போக்கில் இதுவே கற்பது பள்ளி கல்லூரி என ஆகியவிட்டதால் (fees) கட்டணம் என மாறிவிட்டது. நம்ம ஊர்ல பள்ளிக்கூடத்துல ஃபீஸ் கட்டலேன்னா, பையனையோ பொண்ணையோ, . ஃபீஸ் கட்டினா உள்ள வா இல்லேன்னா போய்ட்டுவான்னு வீட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க. இதை நாம சகஜமா எடுத்துட்டு அது சரிதானே ஃபீஸ் கட்டாம புள்ளய எப்படி சேர்த்துகறதாம்னு ஞாயமா தோணும். ஆனா இங்க நிஸில் ஒரு ப்ரைமரி ஸ்கூல்லையும் இத மாதிரி நடந்தது. விஷயத்த மேல சொல்லரதுக்கு முன்னாடி இங்க ப்ரைமரி ஸ்கூல் பின்னனிய பாக்கனும். ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஃபீஸெல்லாம் கிடையாது. எல்லாம் அரசாங்க செலவு. ஆனா பின்னாடி ஜனத்தொகை கொஞ்சம் பெருகினப்புறம் கட்டுப்பிடி ஆகாததுனால வாத்தியார் சம்பளம் போக மத்த இதர செலவுகள அந்தந்த பள்ளிக்கூடங்கள் பாத்துக்க வேண்டியதுன்னு ஆகிப்போச்சு. அதனால பள்ளிகள் பெற்றோரிடமிருந்து நன்கொடை கேட்டு அனுப்புவார்கள். இங்க கவனிக்க வேண்டியது "நன்கொடை" என்பதை. அதவாது ஏதோ முடிஞ்சவங்க குடுத்தா சரி. இது இன்னமும் வழக்கில் உள்ளது. ஒரு வருடம் முழுவதற்கும் மிகக்குறைந்த தொகையே. முக்கால்வாசி பெற்றோர் கொடுத்துவிடுவார்கள். மீதி கால்வாசி கொடுக்க மாட்டார்கள். எத்தனை முறை கடிதமனுப்பினாலும் ஒன்றும் பெயராது. சமீபத்தில் இப்படி ஒரு ஸ்கூலில் நடந்த போது சம்பந்தப்பட்ட அந்த மாணவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவ்வளவுதான் ஒரு கூட்டம் கூட்டி அது எப்படி அந்த மாணவரை தண்டிக்கலாம் என்று ஒருவித கண்டனப்போராட்டமாகிவிட்டது. காரணம் , ஃபீஸ்/நன்கொடை கட்டாதது மாணவரின் குற்றம் அல்ல அது பெற்றோரின் குற்றம். அப்படியிருக்க அந்த மாணவரை தண்டித்தது சரியல்ல என்பதே. இது கவணிக்க வேண்டிய ஒரு மாற்றுக் கோணம். இந்த விஷயத்தில் குழந்தையை தண்டிப்பது சரியா? போராடியவர்கள் கூறியது ஃபீஸ் கட்ட வைப்பதை அந்த பெற்றோருடன் பேசி தீர்வு காணவேண்டுமெயொழிய அந்த மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொண்டுதானாக வேண்டும் என்று. அப்படியே நடந்தது. மாணவரை மீண்டும் சேர்த்துக் கொண்டனர், ஆனால் பெற்றோர் ஃபீஸ் கட்டினார்களா என தெரியவில்லை. நம்ம ஊர்ல இதுபோல் சாத்தியமா? இப்படி இருந்தால் எல்லோருக்கும் கல்வி என்பது சற்று எளிதாகும்.


ரசிகன் என்று வரும்போது உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் உள்ளது. அடுத்த மாதம் ஆக்லேண்டில் நடக்கவிருக்கும் Red Hot Chili Peppersன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று அதிகாலை தொடங்கியது. அதற்காக சனிக்கிழமை நள்ளிரவு 2.30 மணியிலிருந்து அதாவது 24 மணிநேரத்துக்கும் அதிகமா வரிசையில் காத்திருந்தனர். இதில் வாசையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது காரை இடித்து சென்று விட்டனர். இன்னும் யாரென்று கண்டுபிக்கவில்லை. நான் இதனை தட்டச்சிக்கொண்டு இடையில் செய்தியை சென்று பார்த்தால் அடிபட்டவர் இறந்துவிட்டதாக செய்தி சொல்கிறது. மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது, கையில் கற்பூரமேற்றுவதும், பாலாபிஷேகம் செய்வதும், இன்னும் ஒருபடி மேலே சென்று கோவில் கட்டுவதும் உயிரை விடுவதைவிட மேலானது. வாழ்க ரசிகர் மன்றம்.

நடந்தவை நடப்பவை

நேற்று தொலைக்காட்சியில் பார்த்தது இரண்டு.

ஒன்று 2007ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது. இரண்டாவது சேனல் சர்ஃபிங்க்ன் போது (அப்படி ஒண்ணும் நூத்து கணக்கா சேனல் இல்ல இந்த ஊர்ல, ஃப்ரீயா வருவது 6 தான்!!) அல்ஜசீராவில People Power என்ற நிகழ்கால செய்தி தொகுப்பில் உலகத்தின் மூலை முக்கில நடக்கும் மனித சுதந்திர மீறல், அடக்குமுறைகள் பற்றி செய்திகள் வழங்குகிறார்கள். ஷரீன் எல் ஃபெகீ மற்றும் ஜுலியானா ருஃபுஸ் என்று இரண்டு தொகுப்பாளினிகள்.

நேற்று காட்டியது இலங்கையில் LTTEயின் மறுப்பக்கம் பற்றி. வேறு வழியின்றி இலங்கையில் வாழும் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் LTTEயிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தினை பற்றி அதில் காட்டினார்கள். லண்டனில் வாழும் தமிழருக்கு LTTEக்கு எதிராக கருத்து கூறினால் பாதுகாப்பில்லை என்றால் எந்த அளவுக்கு LTTEயின் ஆதிக்கம் உள்ளது என்பது மறைமுகம். இருபது வருடங்களாக நடக்கும் போராட்டம். ஏராளமான உயிரிழப்பு. இதில் பிற இயக்கத் தலைவர்கள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் என புலிகள் போட்டுத்தள்ளியது ஒரு நீண்ட பட்டியல். அதை இங்கே பார்க்கலாம். LTTEக்கு மாற்று தேவை என்பது இந்த மக்களின் மெளனமான எதிர்பார்ப்பு என்கிறது. உண்மைதானோ?

ஆஸ்கார் விருது:

An Inconvinient Truth
ஆவண படத்துக்கு அல் கோர் விருதுவாங்கி, 'Fellow Americans' என பழக்க தோஷத்தில்அவர் பேச தொடங்க, அவர் உடனிருந்தவர் இட்டுப்பில் குத்த, அல் உடனே சுதாரித்தது வேடிக்கையாக இருந்தது. ப்ரெசிடெண்டாதான் ஆக்கல போனா போகட்டும்னு ஆஸ்கார் குடுத்துட்டாங்களோ? எனினும் இந்த வருடத்திலிருந்து ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏற்பாட்டில் இயற்கைக்கு மாசு ஏற்படாதவாரு அமைக்கப்படுமாம். ஒரு பிலியன் மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியினூடாக அல் கோர் தனது பூகோள வெப்ப அதிகரிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு பாராட்டலாம்.


உள்ளூர் செய்தி:

குழந்தையை அடிச்சு வளக்கலாமா? நாம அத பத்தியெல்லாம் கவலையா பட்டோம்? ஆனா இங்க எவ்வளவு அடிக்கலாம், எப்படி அடக்கலாம்னு போன வாரம் இங்க பாராளுமன்றதுல தலைய பிச்சுக்கிட்டு விவாதம் பண்ணி ஒருவழியா அத சட்டமாக்க ஓட்டு போட்டுட்டாங்க. ஆனா வேடிக்க என்னன்னா இந்த சட்டம் நிறை வேர தீவிரமா முயற்சி செஞ்ச அமைச்சருக்கு கொலை மிரட்டல் வர அளவுக்கு போயிடிச்சு. குழந்தைய அடிக்கவே இந்த நாட்டுல இவ்வளவு யோசிக்கிறாய்ங்க, நம்ம ஊர்லன்னா வேலைக்கு வெக்கிறத பத்தி கூட கண்டுக்றதில்ல..ம்ம்ம்..நாமும் ஒரு நாள் முன்னேருவோம் இந்த நிலைக்கு.